Microsoft : மைக்ரோசாப்ட் பெயரில் போலி கால் செண்டர்.. பல கோடி ரூபாய் நூதன மோசடி.. எப்படி நடந்தது? பரபர தகவல்.,

Estimated read time 1 min read

சென்னை:

குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் லைசென்ஸ் தருவதாகக் கூறி ஏமாற்றம் மோசடி கால் சென்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி சைபர் க்ரைம் போலீசார், அதிரடி சோதனையிலும் இறங்கியுள்ளனர். உலகெங்கும் கணினி மற்றும் லேப்டாப்களை பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர்களின் லைசென்ஸ் பெற சுமார் 9 ஆயிரம் ரூபாய் வரை அந்நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும்.

மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர்

அதேபோல ஒரு முறை லைசென்ஸ் பெற்றால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த சாஃப்ட்வேர்களை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக பெரும்பாலான சிறிய நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கு அல்லது சில சமயங்களில் இலவசமாகக் கிடைக்கும் pirated எனப்படும் போலியான சாஃப்ட்வேர்களை பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைசென்ஸ் இல்லாமல் இயங்கும் இதுபோன்ற போலியான சாஃப்ட்வேர்களில் தகவல் திருட்டு குறித்த ரிஸ்க் அதிகம்.

போலி கால் செண்டர்

இதனால் இதுபோன்ற சாஃப்ட்வேர்களை பயனாளர்கள் பயன்படுத்தக் கூடாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து எச்சரித்த பிறகும் கூட பலரும் இதே தவறை தான் செய்கின்றனர். இதுபோல போலியான சாஃப்ட்வேரை பயன்படுத்தும் நபர்களைக் குறிவைத்து மைக்ரோசாப்ட் பெயரில் போலி கால் சென்டர் மூலம் பணம் பறிக்கும் செயலிலும் மர்ம கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் சி.பி.சி.ஐ.டி சைபர் செல் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

மோசடி

இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் இந்த போலி கால் சென்டர் நிறுவனம், pirated வேர்ஷன்களை பயன்படுத்தும் நபர்களுக்கு முதலில் கால் செய்கின்றனர். அவர்களிடம் குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் சாப்ட்வேரின் ஓரிஜினல் லைசன்ஸின் ட்ரையல் வெர்ஷனை தருவதாகக் கூறுகின்றனர். பின்னர், கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் இந்த மோசடி கும்பல் வைரசுடன் கூடிய கூடிய போலியான சாஃப்ட்வேரை அவர்களிடம் கொடுத்து விடுகிறது.

எப்படி

அத்துடன் விடாமல், அந்த வைரஸ் லிங்கை பயன்படுத்தி பயனாளர்களின் கணினியில் முக்கிய தரவுகளையும் திருடுகிறது இந்த மோசடி கும்பல்! அதன் பிறகு சில நாட்கள் அமைதியாக இருக்கும் இந்த மோசடி கும்பல், பின்னர் வைரஸ் மூலம் அவர்களின் கணினி செயல்பட முடியாமல் முடக்கிவிடும். அப்போது பதறிப்போய், மீண்டும் கால் சென்டரை அணுகும் நபர்களையும் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது இந்த மோசடி கும்பல். மேலும், கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கி தகவல்களைத் திருடி பண மோசடியில் ஈடுபடுவதாகவும் இக்கும்பல் மீது புகார் எழுந்துள்ளது.

தீவிர விசாரணை

மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்க்பபதிவு செய்துள்ள சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு போலீசார், ஐ.பி முகவரி மூலம் போலி கால் சென்டர் நடக்கும் இடங்களைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த வழக்கில் பலரும் கைதாக வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் இதற்குத் தொடர்புள்ளதால் அந்தந்த மாநில போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கவும் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours