சென்னை;
மாரிதாஸ், கல்யாண் ராமன் கைதுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு அரசு குறித்தும், தமிழ்நாடு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறி மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Maridhas Answers என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் இவர் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு வந்த நிலையில் இவர் செய்த ட்விட் ஒன்றிற்காக மதுரையில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் கைது
இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம்தான் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு குறித்தும், சில பெண் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் சில ட்விட்களை பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் செய்து வந்தார்.
கைது
சில நாட்களுக்கு முன்பு விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவியும் நடிகையுமான டாக்டர் ஷர்மிளா குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு கல்யாணராமன் ட்வீட் செய்து இருந்தார். இது தொடர்பான புகாரில் கைதானவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் மாரிதாஸ், கல்யாண் ராமன் கைதுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
உதவி
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்துள்ள ட்விட்டில், திமுக தன்னுடைய அதிகார மமதையினால், விமர்சனம் செய்பவர்கள் எல்லோருக்கும் விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பாஜக உறுப்பினர் கல்யாண் ராமன் மற்றும் பிற தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது.
சட்டம்
சட்டம் உத்தரவாதம் அளிக்கும் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக மீறி பழிவாங்க மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க பாஜக போராடும். அனைவருக்கும் சட்ட மற்றும் இதர உதவிகளையும் பாஜக கட்சி முன்நின்று செய்யும்! அவர்களின் குடும்பத்தை பாஜக கவனித்துக்கொள்ளும், என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
+ There are no comments
Add yours