ஈரோடு;
டைமிங் தகராறு காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் பேருந்துகளை மையமாக வைத்து ஏராளமான பிரச்சினைகள் சுற்றி சுழன்றடித்து வருகிறது. திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களில் நடத்துனர் மற்றும் ஒட்டுனர் செய்த காரியங்கள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவ மூதாட்டி, குறவர் மக்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் அனைவரின் கண்டனத்திற்காளான நிலையில், தமிழக முதலமைச்சரே நேரடியாக இவ்விசயத்தில் தலையிட்டார். இதனையடுத்து அந்த பேருந்துகளில் பணிபுரிந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தனியார் பேருந்து ஊழியர்கள்
டைமிங் காரணமாக தகராறு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அடிக்கடி டைமிங் தகராறு காரணமாக தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
ஓட்டுனர் நடத்துனர்கள் மோதல்
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் டைமிங் தகராறு காரணமாக தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் சேர்ந்து மற்றொரு தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டதோடு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். பேருந்தில் இருந்த பயணி ஒருவர் அந்த நடத்துனரை பிடித்த போது உள்ளே வந்த ஓட்டுனர் ஒருவரும் பலமாக தாக்கினார்.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திடீரென உருவான பாக்சிங் மைதானம் போல் பேருந்துக்குள் ஊழியர்கள் சண்டையிடும் காட்சி தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது தனியார் பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சண்டையிடும் சிசிடிவி வீடியோ காட்சி சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours