திருவள்ளூர்;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் தங்களுக்குள் அடிக்கடி கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் சென்னையில் தான் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது போல காட்டப்பட்டாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை அருகே பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாலையில் கால்களை தேய்த்துகொண்டே மாணவர் ஒருவர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் திருவள்ளூரில் பட்டா கத்திகளுடன் சென்ற 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களின் செயல்களால் அதிர்ச்சி
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் சக மாணவருக்கு இணையாக மாணவி ஒருவர் மின்சார ரயிலில் நடைமேடையில் இருந்து ஓடிச்சென்று ஏறி கால்களை உரசிக் கொண்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. மாணவி மற்றும் மாணவியின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவர்கள் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் சாகசம் செய்வது போல் நடந்து கொண்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், கைது நடவடிக்கை பாயும் எனவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆவடியில் மாணவிகள் மோதல்
இரு குழுக்களாக பிரிந்து தாக்குதல்
இந்த தாக்குதலின் போது சில மாணவிகள் கீழே விழுந்தனர். எனினும் விடாமல் எதிர் குழு மாணவிகள் கட்டி புரண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மாணவிகளை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பெண் பயணி ஒருவர் மாணவிகளை சமாதானம் செய்ய கெஞ்சுகிறார். அவரையும் மோதலில் ஈடுபட்ட மாணவிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களுக்கு போட்டியாக மாணவிகளும் பஸ் நிலையத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள், பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோதல் குறித்து விசாரணை
மோதலில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதாக தெரிகிறது. அவர்கள் கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.. அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. பள்ளியில் நேற்று நடைபெற்ற மாதாந்திர தேர்வுக்கு வந்த மாணவிகள் அடிதடியில் இறங்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours