கோவை;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்தை முற்றுகையிட்ட பெற்றோர் நடத்துனர், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு நகரப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காட்டி பள்ளி மாணவிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பாதி வழியில் இறக்கி விடப்பட்ட மாணவிகள் வீட்டிற்கு தாமதமாக சென்றதால் பதற்றம் அடைந்த பெற்றோர் காரணம் தெரிந்தவுடன் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த பேருந்துகள் இயக்கம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8ஏ தடம் எண் கொண்ட அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக செல்வது வழக்கம். மக்கள் தொகை குறைவான பகுதி என்தால் ஒரு சில அரசுப் பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியில் தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வது வழக்கம்.
நடுவழியில் மாணவிகள் இறக்கப்பட்டனர்
ஏற்கனவே குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதுவும் அடிக்கடி தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று மகாதேவபுரம் பேருந்து நிலையத்திற்கு வழக்கம் போல் 8ஏ பேருந்து வந்துள்ளது. அங்கு பள்ளி முடிந்து காத்திருந்த மாணவ, மாணவிகள் அடித்து பிடித்து பேருந்தில் ஏறி உள்ளனர். சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்தில் கூட்டம் அதிகம் இருப்பதாகவும், அடுத்த பேருந்தில் வருமாறு சில மாணவிகளை மட்டும் நடத்துநர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
லேட்டாக சென்ற மாணவிகள்
இதை அடுத்து அடுத்த பேருந்து வர நீண்ட நேரம் ஆகிவிட்டதால் ஷேர் ஆட்டோவை பிடித்து மாணவிகள் வீடு வந்து சேர்ந்துள்ளனர். மாணவிகள் வீட்டிற்கு லேட்டாக வந்ததால் பயந்து போன பெற்றோர் தாமதத்திற்கான காரணத்தை கேட்டறிந்தனர். பேருந்தில் போதிய இடம் இல்லாத காரணத்தால் பாதி வழியில் இறக்கி விடப்பட்டதாகவும், மற்றொரு பேருந்து வர நீண்ட நேரம் ஆனதால் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர நேரம் ஆகிவிட்டதாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பேருந்து சிறைப்பிடிப்பு
இதையடுத்து பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் பேருந்தினை சிறைபிடித்த பொதுமக்கள் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவிகளை பாதி வழியில் இறக்கிவிட்டது ஏன் என நியாயம் கேட்டனர். மாணவிகளிடம் அவசரத் தேவைக்கு பணம் இருந்ததால் வீட்டிற்கு வந்தனர். இல்லையென்றால் எப்படி ஆட்டோவில் வந்திருக்க முடியும். கூலித் தொழில் செய்யும் எங்களால் தினமும் ஆட்டோவில் வரமுடியுமா என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
+ There are no comments
Add yours