புதுடில்லி;
தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வந்த, ‘ஒமைக்ரான்’ எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு, ‘ஒமைக்ரான்’ என, உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.
ஒமைக்ரான் பரவலை தடுக்க, நம் நாட்டிலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.’இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை’ என, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒமைக்ரான் வைரசால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: கர்நாடக மாநிலம் பெங்களூரில், 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இருவருக்கும் சார்ஸ் மரபணு பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரசால் இருவர் பாதிக்கப்பட்டு உள்ளதால், யாரும் பீதிஅடைய தேவையில்லை. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் போதும்; தொற்று பரவலை தடுத்து விடலாம். இந்தியாவில் ஒமைக்ரான் சூழ்நிலை குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசின் தன்மை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. எனினும் இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் ஒமைக்ரான்வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரின் முழு விபரம் தெரியவில்லை. இதில், 66 வயதானவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்; தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்துள்ளார். மற்றொருவர், பெங்களூரில் டாக்டராக பணியாற்றுபவர் என தெரிய வந்துள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த ஐந்து டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் மாற்றம்
மஹாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்க, வெளிநாட்டு பயணியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு தனியாக வெளியிட்டிருந்தது.மத்திய உள்துறை அமைச்சகம், மஹாராஷ்டிர அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 275 படுக்கைகள் தயார்
தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசை தடுக்க தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முக கவசங்கள் போன்றவை மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. இந்த வைரஸ் பரவினால், அதை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் தலா, 150 படுக்கைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தற்போது சென்னையில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 150; ஸ்டான்லியில் 75; ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் என, 275 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பதால், தேவைப்படும் நேரங்களில் அவை ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ளப்படும். அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
24 நாடுகளுக்கு பரவல்
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 8ம் தேதி முதலில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கப்பட்டது.இதுவரை இருந்த கொரோனா வைரஸ் வகைகளிலேயே இது தான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு, அதற்கு முந்தைய நாளை விட இரட்டிப்பாகி வருகிறது.இதற்கிடையே, இந்த வகை வைரஸ் 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours