சூலூர் அருகே குட்டையையும் காணோம்… ! குத்தகை பணத்தையும் காணோம்…!
சூலூர்:
சூலூர்அருகே தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி குத்தகைக்கு கொடுத்த குட்டையையும் காணோம், குத்தகை பணத்தையும் காணோம் என ஊராட்சி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சூலூர் அருகே உள்ள காங்கயம்பாளையம் பகுதியில் இருந்த நீரோடை மற்றும் குட்டையை தனியார் நிறுவனம் ஒன்று தார்சாலை அமைத்து பயன்படுத்திக் கொள்ள மாவட்ட கலெக்டரிடம் குத்தகைக்கு வழங்கக்கோரி விண்ணப்பித்தது. மழைக்காலத்தில் நீர் வழிந்தோடும் நீரோடை மற்றும் 99 சென்ட் பரப்பளவு உள்ள குட்டை புறம்போக்கு இருந்தது. இதை தங்களது நிறுவனத்திற்கான அணுகு பாதையாக பயன்படுத்திக் கொள்ள கலெக்டரிடம் அனுமதி கோரினர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்த நிலையில் அப்போதைய அதிமுகவினர் வற்புறுத்தலின் பேரில் அன்றைய கலெக்டர், நீரோடையில் தார்ச்சாலை அமைத்து பயன்படுத்தி கொள்ள குத்தகை அடிப்படையில் அனுமதி அளித்தார்.
இதற்காக, வருடம் ஒன்றிற்கு 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்து குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதில், கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை குத்தகை செலுத்திய அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக குத்தகை செலுத்தவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக, ஊராட்சி சார்பில் பலமுறை கடிதம் அனுப்பியும் குத்தகை தொகை செலுத்தவில்லை என ஊராட்சி செயலாளர் வினோத்குமார் புகார் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறையிடம் விசாரிக்கையில், மேற்படி நிறுவனம் குத்தகைக்கு எடுத்த குட்டையில் தார்சாலை அமைத்து அரசின் உத்தரவுபடி ஊராட்சியிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தார்சாலை அமைத்தவுடன் அதிமுகவில் தங்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி நீரோடை குட்டை புறம்போக்கு என இருந்த பூமியின் வகைப்பாட்டை, ஊராட்சி தார்ச்சாலை என உபயோக மாற்றம் செய்ய ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குத்தகை தொடர்பான ஆவணங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சூலூர் நில வருவாய் ஆய்வாளர் சிவபாலனிடம் கேட்டபோது, இது பெரிய இடத்து விவகாரம், நான் எதுவும் கூற முடியாது என தெரிவித்தார். இதுபோல், கிராமப்புறங்களில் ஏராளமான நீர்நிலைகளை அதிமுகவினர் உதவியுடன் பலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் அப்போதைய கோவை கலெக்டர் குட்டையை குத்தகைக்கு விட்ட சம்பவத்தில் தற்போது குட்டையையும் காணோம், குத்தகையையும் காணோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த நீரோடை விவகாரத்தில் தலையிட்டு குட்டையை மீட்க வேண்டும் அல்லது ஊராட்சிக்கு வருவாய் வரும் வகையில் குத்தகையையாவது வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
+ There are no comments
Add yours