10 வயதில் 5 கவிதை நுால்கள் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்ற சிறுவன்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயதிலேயே கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து, மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றதோடு, தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, பன்னாட்டளவில் விருதுகள் பெற்று அசத்தி வருகிறார் அரசுப்பள்ளி மாணவர் மதுரம் ராஜ்குமார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் பால்பண்ணை நிறுவன காவலாளி செல்வக்குமார்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் மதுரம் ராஜ்குமார்(12).
வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புபடித்து வருகிறார். மதுரம் ராஜ்குமாருக்கு பொம்மைகளோடு விளையாடும் சிறு வயதிலேயே கவிதை எழுதும் தனித்திறன் தானாய் பிறந்து விட்டது.
அன்பு, அழுகை, இன்பம், துன்பமென எந்நிகழ்வையும் காகிதத்தில் கிறுக்கி கவிதையாக்கும் இச்சிறுவனின் ஆற்றலை கண்டறிந்த பெற்றோரும், ஆசிரியர்களும் உதாசினப்படுத்தாமல் ஊக்கம் கொடுத்தனர். இதனால், நான்காம் வகுப்பு படிக்கும் போதே, பள்ளி, மகிழ்ச்சி, கோபம், பட்டம் உள்ளிட்ட 55 தலைப்புகளில் ரத்தினச்சுருக்கமாய் நல்லக் கவிதைகளை படைத்தான்.
இச்சிறுவனின் சிந்தையில் உதித்த கவிதைகளை சேகரித்த இவரது பெற்றோர், ‘நல் விதையின் முதல் தளிர்‘ என்ற தலைப்பில் நுாலாக வெளியிட்டனர். இந்நுாலுக்கு பாவலர்களின் பாராட்டுகளும், பல்வேறு அமைப்பின் விருதுகளும் குவிந்தன.
இச்சிறுவனின் திறனறிந்த ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எச்சிறுவனும் நிகழ்த்தாத உலக சாதனையை நிகழ்த்திட, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனான மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது. வறிய நிலையில் மிகுந்த பொருட்செலவை தாங்க முடியாத சூழலிலும், தன்னார்வர்களின் ஆதரவைப் பெற்ற இவரது பெற்றோர், தனது மகன் உலக சாதனை படைப்பதற்கு தளம் அமைத்துக் கொடுத்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2018 டிசம்பர் மாதம் 11 ஆம்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பலரும் கொடுத்த பல்வேறு விதமான தலைப்புகளில் 173 கவிதைகளளை எழுதி உலக சாதனை படைத்தான். கல்வி அலுவலர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் இச்சிறுவனை பாராட்டினர். இச்சிறுவனின் உலக சாதனை கவிதைகள் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட நுாலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நுாலை அரசு நுாலகங்களுக்காக நிகழாண்டு தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
இதனையடுத்து, 2020ல் பாரதியாரின் 110 ஆத்திச்சூடிகளுக்கும் கவிதை எழுதி பாரதியார் ஆத்திச்சூடி மதுரம் கவிதைகள் என்ற நுாலையும், திருக்குறளின் 133 அதிகாரத்திற்கும் ஒரு கவிதை எழுதி திருக்குறள் மதுரம் கவிதைகள் என்ற தனது நான்காவது நுாலையும் சிறுவன் மதுரம் ராஜ்குமார் வெளியிட்டார்.
அப்துல் கலாமின் நினைவாக “காலத்தை வென்ற கலாம்” என்ற தலைப்பில் இச்சிறுவன் எழுதிய கவிதை நுால், அண்மையில் ‘எழுதுக’ அமைப்பின் வாயிலாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விடுமுறை தினங்களில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று கவிதைபாடி வரும் இச்சிறுவனுக்கு வாழப்பாடி இலக்கியப்பேரவை இளம் கம்பன் விருது வழங்கி கெளரவித்தது. இச்சிறுவனின் கவிப்புலமை கண்ட சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழம், 2019 ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பாராட்டியது.
தமிழ்த் தொலைக்காட்சிகள், பண்பலைகளில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் வெகு பிரபலமாகிப் போன, இச்சிறுவனின் அபரிமித கவியாற்றலும், ஆர்வமும், மன உறுதியும், பன்னாட்டு அளவில் ஏராளமான கவிதைத் தொகுப்புகளில் இவரது கவிதைகளை இடம்பெறச் செய்துள்ளது. 12 வயதுக்குள்ளேயே பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சிறுவனின் ஆற்றலும் திறமையும் மட்டுமின்றி, இவரது பெற்றோர்களின் உந்துதலும், ஊக்கமும், பிற துறைகளிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுவர் சிறுமியருக்கும், குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்த விழையும் பெற்றோர்களுக்கும் நடைமுறை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றால் இது மிகையல்ல.
‘எனது பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தால் எனது எண்ணத்தை கவிதையாக எழுதும் திறனைப் பெற்றேன். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர் சலிக்காமல் பதிலை தேடித் தந்தனர். சிறுவயதிலேயே நான் 5 கவிதை நுால்களை வெளியிட்டு உலக சாதனை படைத்ததற்கும் பல விருதுகளை பெறுவதற்கும் தமிழறிஞர்களை சந்திப்பததற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தாய் மொழிக்கு என்னால் முடிந்த புகழை பெற்றுக் கொடுப்பேன். கவிதையில் மட்டுமின்றி கல்வியில் சாதிப்பதே என் எதிர்கால லட்சியம் என்றார் இளம் கம்பன் மதிப்புறு முனைவர் மதுரம்
ராஜ்குமார்.
+ There are no comments
Add yours