விருதுநகர்:

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3.10 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை, பல மாநிலங்களிலும் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். அதிமுக முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் செல்போன் எண்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இணையதளம் மற்றும் மாவட்ட எஸ்பி மனோகரிடம் புகார் அளித்த 7 பேர், முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன், அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராஜசிம்மன் மற்றும் இருவரிடம் மதுரை சரக டிஜஜி காமினி, எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர்.

ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை, தர்மபுரி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேல், கார் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், போலீசாரிடம் சிக்காமல் ராஜேந்திரபாலாஜி தப்பி வருகிறார்.போலீசார் கூறுகையில், ‘‘‘‘வட மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார்களில் வேறு கட்சிக்கொடி கட்டி ராஜேந்திரபாலாஜி தப்பி உள்ளார். ஐபோன்களில் விசேஷ ஆஃப் மூலம் பேசி வருகிறார். தினமும் வழக்கறிஞருடன் பேசி வருகிறார். விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 4 பேரையும் விடுவித்துள்ளோம்’’’’ என்றனர்.

கோவையில் பதுங்கல்?
கோவையில் உள்ள  அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய நண்பர் ராஜேந்திரபாலாஜி என்பதால் தொண்டாமுத்தூர் மலையடிவார கிராமங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தொண்டாமுத்தூர் மலையடிவாரத்தில்  உள்ள உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் முக்கிய அதிமுக பிரமுகரின் பண்ணை வீடு உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களை விருதுநகர் போலீசார் மாறுவேடத்தில் இரவும் பகலுமாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *