வேங்கைவயல் மற்றும் சங்கம்விடுதி குடிநீர் தொட்டி அசுத்தப்படுத்தப்பட்ட சம்பவங்களில் விசாரணையை துரிதப் படுத்தியிருக்கிறது சிபிசிஐடி. ஏற்கனவே இதுபோன்ற 3 சம்பவங்கள் அரங்கேறிவிட்ட நிலையில் குடிநீர் தொட்டிகளை பாதுகாத்து ‘சமூக நீதி’ காக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்திருக்கிறது.

ஒரு காலத்தில் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தத்துக்கான போராடிய தலைவர்களின் சிலைகளை தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் சமூக விரோதிகள். சாதிய கலவரங்கள், கொலைகளையும் கண்டிருக்கிறது, பல ஆண்டுகளாக சந்தித்தும் வருகிறது இச்சமூகம். அந்த வகையில் வேண்டாதவர்களை பழிவாங்க அவர்களின் வசிப்பிடத்திலிருந்து குடிநீர் தொட்டிகளில் அசுத்தப்படுத்துவது போன்ற கொடிய நிலைக்கு வந்திருப்பது காலக் கொடுமை.

வேங்கைவயல் மக்கள்

வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய பிறகே புதுக்கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தனர். காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியில் அழுகிய முட்டை கலக்கப்பட்டதையும் கேட்டிருப்போம். இதுபோல எத்தனை கொடூர சம்பவங்கள் செய்தியாக மாறாமல் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லப்படுகிறதோ எனத் தெரியவில்லை. “இனியொரு சம்பவம் அப்படி நிகழ்ந்திடாமல் பார்த்துக் கொள்வது அரசு மற்றும் காவல்துறையின் கடமை” என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா தாயுமானவன், “வேங்கைவயல் சம்பவத்தில் தவறு நிகழ்ந்தபோதே, குற்றவாளிகளை கைது செய்து தக்க தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால், சமூக விரோதிகளுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். அதில் கோட்டைவிட்டு, அப்படியான சம்பவங்கள் தொடரும்போது வருந்துவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த லட்சணத்தில் `சமூக நீதி ஆட்சி’ என பெருமிதம் பேசுகிறது ஆளும் தரப்பு. மக்களிடம் சாதிய எண்ணங்கள் கூர்மையாக சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சில கட்சிகளும்தான் இதுபோன்ற அவலங்கள் அரங்கேற பொறுப்பேற்க வேண்டும்” எனக் கொதித்தார்.

வெண்ணிலா தாயுமானவன்

அரசியல் நோக்கர்கள் சிலரோ, “சாதிய குற்றங்கள் நிகழும்போது காவல்நிலையங்களில் பேசி தீர்க்கும் முறையை தமிழ்நாட்டில் கைவிட வேண்டும். குற்றம் நிகழ்ந்தால் அவசியம் வழக்கு பதிவு செய்யும் நடைமுறைக்கு மாற வேண்டும். சிபாரிசின் பேரில் வழக்கு பதிவு செய்யப்படாமல் கண்டித்து அனுப்பும்போதே சமூக விரோதிகளுக்கு தைரியம் பிறக்கிறது. சாதிய தூண்டுதலில் குற்றம் நிகழும் பகுதிகளை ரேடாரில் கொண்டு வந்து கண்காணிப்பு வளையங்களில் விரிவடையச் செய்வதும் அவசியம். மேலும் வேங்கைவயல், சங்கம்விடுதி மற்றும் காஞ்சிபுரம் சம்பவ குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்கப்பட்டாலே இதுபோன்ற குற்றங்கள் குறைந்துவிடும்” என்றனர்.

“சமூக நல்லிணக்கம் நலிவடைவதை உணர்ந்து வருங்கால தலைமுறைக்கு சாதிய வாடை தெரிந்திடாமல் தடுக்க அரசு சில திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வியை போல கல்வி பயிலும் மாணவர்களின் வழியே சாதிய எண்ணங்களுக்கு தீ வைக்க வேண்டும். குறிப்பாக சாதிய நோக்குடன் செயல்படும் காவல் அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் களையெடுப்பது அரசின் கடமை என்கிறார்கள்” சமூக ஆர்வலர்கள் சிலர்

அலட்சிய காவல்துறை…

தி.மு.க செய்தி தொடர்பாளர்களிடம் பேசிய போது, “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் குடிநீர் தொட்டிகளைச் சுற்றி மதில் சுவர் மற்றும் கதவுகள், பூட்டுகள் போடுவதற்கும் சேர்த்து மதிப்பீடு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை சீரான வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் பிடிபட்ட பின் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தக்க பாடமாக அமையும்” என்றனர்.

சம்பவம் நடந்து மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. அவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து, வழக்கை நடத்தி தண்டனை பெற்று கொடுப்பதற்கு எத்தனை காலம் எடுக்குமோ..?! அரசுக்கு தான் வெளிச்சம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *