2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின்போது, இந்தோனேஷியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிவந்து, அதை இந்தியாவில் அதிக விலைக்கு அதானி குழுமம் விற்றது என்ற செய்தி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலக்கரி

இந்த விவகாரம் குறித்த செய்தி ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ‘பா.ஜ.க ஆட்சியில் அதானி நிறுவனம் மிகப்பெரிய அளவுக்கு நிலக்கரி ஊழலில் ஈடுபட்டது அம்பலமாகியிருக்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

மேலும், ‘நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலமாக பிரதமர் மோடியின் நண்பரான அதானி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கொள்ளையடித்திருக்கிறார். தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலை உயர்த்தி விற்றதன் மூலமாக அதானி கொள்ளை லாபம் அடித்திருக்கிறார்.

ராகுல் காந்தி

அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் காரணமாக, சாமானிய மக்கள் அதிகமான மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக எத்தனை டெம்போக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார்? அதானி நிறுவனத்தின் இந்த வெளிப்படையான ஊழல் மீது சி.பி.ஐ-யோ, அமலாக்கத்துறையோ, வருமானவரித் துறையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்காக எத்தனை டெம்போக்கள் அனுப்பப்பட்டன என்பதை மோடி சொல்வாரா?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘இந்தோனேஷியாவிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலமாக தரமற்ற நிலக்கரியை ஏற்றிவந்து, உயர்தரமான நிலக்கரி என்று பொய் சொல்லி தமிழ்நாடு மின்வாரியத்திடம் அதானி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

அதன் மூலம், அதானி நிறுவனம் ரூ.3,000 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. இதன் மூலம் சாமானிய மக்கள் அதிகமான மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். தரமற்ற நிலக்கரி என்பதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் மோடியின் நண்பரான அதானி எப்படியெல்லாம் தன்னை வளப்படுத்திக்கொண்டார் என்பதற்கு இது ஓர் உதாரணம்’ என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது” என்று சாடியுள்ளார்.

‘அதானி நிறுவனத்திடமிருந்து தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்கியதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கே.பாலகிருஷ்ணன்

“அதானியின் பகல் கொள்ளையில் அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியாளர்கள் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். இந்த கூட்டுக்கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

மோடி – அதானிக்கு எதிராக இதே குற்றச்சாட்டு கடந்த ஆண்டும் எழுந்தது. ‘நிலக்கரி இறக்குமதி மூலமாக ரூ.32,000 கோடி மக்களின் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது. நாட்டின் பிரதமரால் பாதுகாக்கப்படும் ஒரு நபரின் நேரடி திருட்டு இது. பிரதமர் மோடி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி

அதற்கு பதில் கொடுத்த பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளரான கௌரவ் பாட்டியா, ‘பொதுச்சொத்தை சூறையாடுவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம், இலக்கு. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ராகுல் காந்தி பேசமாட்டார்’ என்றார். தற்போது, அதானி ’நிலக்கரி ஊழல்’ குறித்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர்கள் நேரடியாக இது குறித்து பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *