இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக விவரிக்கிறது அந்த ஊடகம்.  ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

இது விபத்துதான் என்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், “இந்த விபத்தில் எந்த சதித்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரம், நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம், விசாரணையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

ஆனால், இதில் இஸ்ரேலின் கரங்கள் இருக்கிறது.  இப்ராஹிம் ரைசி இஸ்ரேலுக்கு எதிராக கடும்போக்கு கொண்டவர். அதனால், இது விபத்தாக இருக்காது என இணைய சதிகோட்பாட்டாளர்கள் சந்தேகம் கிளம்ப்புகின்றனர். ஆனால், எந்த சர்வதேச நாடுகளும் இது குறித்து இப்படியான கருத்தை தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் பெயர் அடிப்பட்ட உடன் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் (Mossad) பெயர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சரி `மொஸாத்’ என்றால் என்ன… இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படுவது ஏன்? விரிவாக விவரிக்கிறது இந்தக் குறு கட்டுரை.

`மொஸாத்’

 இஸ்ரேல் என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது `மொஸாத்’ (Mossad). அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துக்கு அடுத்ததாக உலகின் சிறந்த உளவு நிறுவனமாகக் கருதப்படுவது. இதைத் தவிரவும் அவர்களிடம் இன்னும் இரண்டு உளவு நிறுவனங்கள் உண்டு. அவை, ராணுவத்தின் உளவுப் பிரிவான அமான் (Aman). உள்நாட்டு உளவுப்பிரிவான ஷபாக் (Shabak). இது Shin Bet என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

7 ஆயிரம் பேரும்… கொலைகளும், கடத்தல்களும் 

இஸ்ரேலின் தேசிய உளவுப்பிரிவான மொஸாத் உலகெங்கும் அறிமுகமான ஒன்று தான். சுமார் 7,000 பேர் பணிபுரியும் இது, உலகின் பெரிய உளவு நிறுவனங்களில் ஒன்று.

உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று கொலைகள் செய்யும், குண்டுவைத்து கட்டடங்களை நொறுக்கும், விமானங்கள் உள்ளிட்ட எதையும் கடத்தும் ஓர் அமைப்பை பொதுவாக என்னவென்று சொல்வார்கள்? ‘தீவிரவாத அமைப்பு’ என்று கட்டம் கட்டி தடை செய்வார்கள்.

Mossad | மொஸாத்

மொஸாத் அந்த வேலையைத்தான் அன்டார்ட்டிகா தவிர்த்து அத்தனை கண்டங்களிலும் செய்துகொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது, ரகசிய ஆபரேஷன்கள் செய்வது, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று இதன் பணிகள் ஏராளம். 

மொஸாத் அமைப்புக்காக ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 22 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழிக்கிறது இஸ்ரேல். இதில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பதெல்லாம் தேசிய ரகசியம். மொஸாத்தின் இயக்குநர் நேரடியாக இஸ்ரேல் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்பதால், வேறு எவரும் அவரைக் கேள்விகள் கேட்க முடியாது.

மொஸாத் – நான்கு பிரிவுகள் 

மொஸாத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. `Tzomet’ என்பது அவற்றில் மிகப்பெரிய பிரிவு. வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகள் போர்வையிலும், வியாபாரிகள் போலவும் இந்தப் பிரிவினர் இருப்பார்கள். சில நாடுகளில் உள்ளூர் ஆட்களையும் உளவாளியாக மாற்றி பணியில் சேர்ப்பார்கள். இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பது இவர்களின் பணி.

`Caesarea’ என்பது ஸ்பெஷல் ஆபரேஷன்களைச் செய்யும் பிரிவு. எதிரி நாடுகளில் குண்டுகள் வைப்பது, வேதிப்பொருட்கள் செலுத்திக் கொலை செய்வது போன்ற பணிகளை இந்தப் பிரிவினர் செய்வார்கள். இதிலேயே `Kidon’ என்ற துணைப்பிரிவு இருக்கிறது. இவர்கள் கொலைப்படையினர். இலக்கை மட்டும் இவர்களிடம் சொன்னால் போதும். போய் ஆளை சுட்டுக்கொன்றுவிட்டு வந்துவிடுவார்கள்.

`Keshet’ என்ற பிரிவு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது. ஒட்டுக் கேட்பது, எதிரி நாடுகளின் இணையதள நெட்வொர்க்கை முடக்குவது, எலெக்ட்ரானிக் உபகரணங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பது போன்ற பணிகளில் இந்தப் பிரிவினர் நிபுணர்கள்.

`Metsada’ என்ற படு ரகசியமான பிரிவும் ஒன்று இருக்கிறது. எதிரி நாடுகளில் அரசுக்கு எதிரான கலக அமைப்புகளை உருவாக்கிக் குழப்பம் ஏற்படுத்துவது இவர்களின் வேலை.

எப்படி இவர்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்?

மொஸாத் அமைப்பு ஏன் வெற்றிகரமான உளவு அமைப்பாகச் செயல்படுகிறது? 

அந்த அமைப்புக்காக வேலை செய்பவர்களின் பட்டியலைப் பார்த்தால் இது புரியும். மொஸாத்தில் பணிபுரியும் உளவாளிகள் எல்லோரும் `Katsa’ என்று அழைக்கப்படுகிறார்கள். 

மொஸாத்துக்காக கொலைகள் மட்டுமே செய்யும் `Kidon’ பிரிவில் இருப்பவர்கள் யார் யார் என்று மொஸாத்தில் இருக்கும் சீனியர் அதிகாரிகள் பலருக்கே தெரியாது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியில் இணைகிறார்கள்.

யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாடு புதிதாக உருவெடுத்தது என்பதால், உலகெங்கும் இஸ்ரேலை நேசிக்கும் யூதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து மொஸாத் உளவாளிகள் தங்களுக்கு உதவி செய்ய வைக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்களில், அவர் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கு யாரோ ஒருவர் கார் கொண்டுவந்து கொடுப்பார், துப்பாக்கி கொடுப்பார், ரகசியமான இடங்களுக்கும் கூட்டிப் போவார். அப்படி மொஸாத் உளவாளிகளுக்கு நிஜமாக இவர்கள் உதவுகிறார்கள்.

இஸ்ரேல் தூதர்களிடம் மொஸாத் குறித்து உரையாடும் பிரதமர்

Sayanim என்று அழைக்கப்படும் இவர்களின் உதவியால்தான் மொஸாத் இயங்குகிறது. அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரம் சயானிம்களும், பிரிட்டனில் 5,000 சயானிம்களும் இருக்கிறார்கள் என்றால் மொஸாத்தின் பலத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

இவர்களைத் தவிர, இஸ்ரேலில் வந்து உயர்கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாடுகளில் படிக்கப் போகும் இஸ்ரேல் மாணவர்கள் என்று பலரையும் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது மொஸாத். இதனால், நாம் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில், நினைத்தே பார்க்க முடியாத மனிதர்கள் மொஸாத்தின் ஏஜென்ட்களாக இருப்பார்கள். 

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சிறிய நகரத்தில் மொஸாத் ஆசாமிகள் இருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர்கள் நெட்வொர்க் அந்த அளவு விரிவானது.!

நன்றி : தி. முருகன் | https://bit.ly/3V5NVMp

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *