Loading

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, “வரக்கூடிய தேர்தல், மற்ற தேர்தல்களை போல் இல்லை. யார் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தேர்தல் இல்லை. யார் ஆட்சியில் இருக்க கூடாது, யார் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை தாண்டி இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.

பிரசாரம்

இந்த தேர்தலில் நிச்சயமாக பா.ஜ.க. வெற்றிப்பெற வாய்பில்லை, அப்படிப்பட்ட விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன், இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல். அதன் பிறகு தேர்தலே நடக்காது, சர்வாதிகாரம் மட்டும்தான் தலைவிரித்தாடும். நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாகூர், எத்தனையோ முறை பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி தொடர்ந்து அதானி விஷயத்தைப் பேசியதை தொடர்ந்து, அவரின் பதவியை நீக்கி வழக்குப்போட்டு நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் செய்தார்கள். அதன் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்றுதான் அவரால் மறுபடியும் பாராளுமன்றத்திற்கு வரமுடிந்தது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அணைத்து வங்கிக் கணக்கையும் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

வரவேற்பு

தேர்தலில் அவர்களுக்கு அந்தப் பணம் பயன்படக் கூடாது என்பதற்காக… பா.ஜ.க.வை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக… இரண்டு முதலமைச்சர்கள் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், ஒரு துணை முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சிறையில் இருக்கிறார். அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் வழக்கு, கிட்டத்தட்ட பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு போடப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட 80 சதவீதம் எதிர்க்கட்சிகள் மேல்தான். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய இடத்தை பறித்துவிடலாம், கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படலாம், உங்கள்மீதும் வழக்கு பாயும்.

பேச்சு

தமிழ்நாட்டைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. நமது தமிழகத்திற்கு நமக்கு வரவேண்டிய நிதியும் வராது, ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் 29 பைசா தமிழ்நாட்டிற்கு திருப்பித் தருகிறார்கள். மழை, வெள்ளம் வந்தால் நிவாரணம் கூட வராது. அவர்கள் ஆட்சியில் எந்த திட்டமும் வராது. நம் கஷ்டப்பட்டபோது ஒருமுறை கூட பிரதமர் மோடி வந்து எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சுற்று சுற்றி வருகிறார். அடுத்த வாரம் கூட நான்கு நாள்கள் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி எவ்வளவுதான் முயன்றாலும், தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழகத்தின் ஆளுநர் எல்லாம் தெரிந்த மனிதர்போல பேசுவார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கனார், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 75 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார். அவரின் தியாகத்தை போற்றி, கழக ஆட்சி பொறுப்பேற்றதும் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கப்பட்டது.

அப்பேற்பட்ட வரலாற்றை தாங்கும் தமிழ்நாட்டின் பெயரை, தமிழகம் என மாற்றம் செய்யவேண்டுமென சொல்வதற்கு அவர் (ஆளுநர்) யார். இதற்கிடையில் அண்ணாமலை என்ற பெயரில் இன்னொரு அதிகாரியும் உள்ளார். என் மண், என் மக்கள் என்று சொல்கிறார். ஆனால் கர்நாடகாவில் அவர் பணியில் இருந்தபோது ‘நான் தமிழன் இல்லை, கடைசி மூச்சு இருக்கு வரை நான் கன்னடக்காரன் தான்’ என்று சொன்னவர், இன்று கோவை தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். ஏன்?, கர்நாடகாவில் நிற்கவில்லை. அங்கு எதாவது ஒரு தொகுதியில் நிற்கவேண்டியது தானே. நாம் என்ன மாற்றம் செய்யவேண்டும் என நமக்குச் சொல்லித்தருவதற்கு, இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

தமிழ் பேசத்தெரியவில்லை எனப் பிரதமர் வருத்தப்படுகிறார். அவர்களோ, நம்மை இந்தி படியுங்கள் என்கிறார்கள். பிரதமர் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சரே கட்டாயம் ஒரு தமிழாசிரியரை அவர் தமிழ் கற்பதற்காக அனுப்பிவைப்பார். மத்தியில் நமது கூட்டணி ஆட்சி வந்தவுடன் உங்களுக்குக் கொடுத்த எல்லா வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மகளிர் விடியல் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்துவது போல, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை நமது ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். நம்மைப் போலக் காங்கிரஸ் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும். மேலும், இந்த மக்களவை தொகுதியில் அனேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தப் பகுதியில் உள்ள ஆனைகுட்டம் அணையில் மதகுகள் பழுதுபார்க்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது,

பேச்சு

விருதுநகர் மக்களவை தொகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் ரூ.414 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டு குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வியாபாரிகள் நலனுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சேஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனா நதியின் குறுக்கே ரூ.5 கோ மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, மேலும் அர்ஜுனா நதியின் நீர்வழி பாதையில் உள்ள முத்துலிங்காபுத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் சிலிண்டர் விலை ரூ.500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும். கைவிரலைப் பிரித்தால் உதயசூரியன், சேர்த்தால் காங்கிரஸ் சின்னம். இவ்வளவுதான்‌ வித்தியாசம். ஆகவே, வாக்காளர்கள் அனைவரும் காங்கிரஸ் சின்னத்திற்கு வாக்கு தரவேண்டும்” என பேசினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *