மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி, மதுரை ஆரப்பாளையம், பெத்தானியாபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

கனிமொழி

கனிமொழி பேசும்போது, “மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மக்களுக்காக போராடக்கூடிய, பாடுபடக்கூடியவர், குரல் எழுப்பக்கூடியவர். தமிழுக்காக தமிழ் மக்களுக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.

மதுரை மக்கள் தெளிவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். மொழி மற்றும் மாநில உரிமைக்காக போராடக்கூடிய தமிழக மக்களை பாஜக மதிப்பதே இல்லை.

மதுரையில் நெய்ப்பர் எனும் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க அண்ணன் அழகிரி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன் பின்பு அத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இப்போதுவரை அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.

எல்லா மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கும் பாஜக அரசு நிதி ஒதுக்குவார்கள். ஆனால் தமிழக திட்டங்களுக்கு ஒதுக்க மாட்டார்கள். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டியதோடு சரி, என்ன ஆனது எனத் தெரியவில்லை. அறிவிக்கப்பட்ட எல்லா மாநிலங்களாலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானிலிருந்து பணம் வாங்க வேண்டும் என கூறுகிறார்கள்.

கனிமொழி

ஒன்றும் இல்லாத உத்தரப்பிரதேசத்தில் பல பன்னாட்டு விமான நிலையங்களை அமைக்கிறார்கள். அம்பானி வீட்டு திருமணத்திற்காக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுகிறார்கள். ஆனால், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மறுக்கிறார்கள்.

அம்பானி, அதானி கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்யும், தன்னுடைய தேர்தல் அரசியலுக்காக புல்வாமாவில் நம்முடைய வீரர்களை பலி கொடுத்தவர்களுக்கு நம் மீது என்ன அக்கறை இருக்கப் போகிறது?

ஆட்சிக்கு வந்தால் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக மோடி வாக்குறுதி கொடுத்தார். அது குறித்து கேட்டால், பக்கோடா போட சொல்கிறார் அமித்ஷா. நாங்கள் பக்கோடா போடுவதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்?

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துகிறார்கள். மக்கள் மீது ஈரமோ, இரக்கமோ கொஞ்சம்கூட பாஜக-வுக்கு இல்லை.

முதியோர் ஓய்வூதியம் வாங்கும் இருவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகப் பொய் வழக்கு தொடர்ந்தது பாஜக. காரணம், பாஜக-வின் முக்கிய பிரமுகர் அவர்களின் நிலத்தை அபகரிக்க முயன்றார், அதற்கு எதிராக இவர்கள் போராடினார்கள் என்ற காரணத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

கனிமொழி

அருணாசலபிரதேசத்தில் 30 கிராமங்களில் கட்டடங்களை கட்டி சீனமொழியில் பெயரே வைத்துவிட்டனர். ஆனால், நான் தான் பெரிய வல்லவர், நல்லவர் என பிரதமர் பேசுகிறார். அருணாச்சல பிரதேச, லடாக் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து கேள்வி கேட்க பிரதமருக்கு தெம்போ, தைரியமோ, திராணியோ உண்டா?

பாஜக-வை எதிர்த்து கேள்வி கேட்டால், எங்களை அர்பன் நக்சல் என்கிறார்கள். சி.பி.ஐ, இ.டி, ஐ.டி என ஏவி விடுகிறார்கள். எதிர்க்கும் அனைவரையும் சிறைப்படுத்தி வழக்கு பதிவுசெய்கிறார்கள்.

ஊழல் வழக்கு உள்ள நபர்கள் இணைந்துவிட்டால் பாஜக வைத்துள்ள பெரிய வாஷிங்மெஷினில் வாஷ் செய்து குற்றமற்றவர்களாக மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, அப்படி மிரட்டியே ஆட்சியில் இருக்கலாம் என பாஜக-வினர் நினைக்கிறார்கள்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல். ஜனநாயகத்தின் மீது பாஜக-வுக்கு நம்பிக்கை இல்லை. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது காங்கிரஸ் அறிவித்த ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். கலைஞர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் ஆயிரத்துடன், ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.

தமிழகத்திற்கு நிதி வர வேண்டும். நிதி தராத ஒன்றிய ஆட்சியை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *