கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எல்.தங்கவேலுவை ஆதரித்து அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் கரூர் தோரணக்கல்பட்டி பகுதியில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேலுக்கு வாக்குகள் சேகரித்து பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் தோல்வி பயத்தில் பேசி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியாதவர் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்பு 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பட்டியலிட்டு அ.தி.மு.க-வினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு 36 அமாவாசைகள் கடந்து விட்டது. மீதமுள்ள 24 அமாவாசைகளில், இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். அதற்கான, முன்னோட்டமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். கரூர் நாடாளுமன்ற தொகுதியை காப்பாற்றுவதற்கு அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேலுக்கு கரூர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

பிரசாரப் பொதுக்கூட்டம்

தி.மு.க ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முன்னோக்கி சென்றது. தற்போது, தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே கிடையாது ஊழல் நிறைந்த ஆட்சி தான் தி.மு.க ஆட்சி. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே ஊழல் அதிகரித்து விடும். இந்திய அளவில் இதற்கு முன்னர் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஒரு அரசு தி.மு.க அரசு மட்டுமே.

கரூர் மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க-வினர் மீது அதிக வழக்குகளை தி.மு.க அரசு காவல்துறையை வைத்து பதிவு செய்துள்ளது. சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் எத்தனை வழக்குகள் அ.தி.மு.க-வினர் மீது போட்டாலும் அதனை நாங்கள் சந்திக்க தயார். நான்கு வருடங்கள் 2 மாதங்கள் ஆட்சி நடத்திய அ.தி.மு.க அரசு நினைத்திருந்தால், தி.மு.க-வினர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்திருப்போம். ஆனால், அ.தி.மு.க அரசு மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டது. அ.தி.மு.க முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கடவுளாக ஆசி வழங்கி வருகின்றனர். அதனால்தான், அ.தி.மு.க என்னும் இயக்கத்தை எத்தனையோ பேர் உடைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. அ.தி.மு.க என்னும் கட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தொண்டர்கள் பலத்தோடு உள்ள தொண்டன் கட்சி இது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை 10 சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், தி.மு.க-வினரும், முதலமைச்சரும் பச்சை பொய்யை கூறி வருகின்றனர். 90 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகின்றனர்.

தி.மு.க ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் அ.தி.மு.க வலியுறுத்திய காரணத்தினால் மட்டுமே நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் மகளிர்க்கு வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க தேர்தல் அறிக்கையில் அனைத்து நகர பேருந்துகளிலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. சமீபத்தில், கர்நாடகாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சி அமைத்த அரசு தேர்தல் வாக்குறுதியை மூன்றே மாதத்தில் நிறைவேற்றியது. ஆனால், தி.மு.க அரசு மகளிர்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆனால் 27 மாதங்கள் கழித்து அ.தி.மு.க கொடுத்த அழுத்தம் காரணமாக மட்டுமே மகளிர் உரிமைத் தொகையை அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 27 மாதங்களுக்கு 27,000 ரூபாய் தி.மு.க அரசு வழங்காமல் ஏமாற்றி விட்டது.

தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்

அதேபோல, அ.தி.மு.க அரசு நிறைவேற்றி வந்த நல்ல திட்டங்களை தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் நிறுத்திவிட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை நிறுத்தி மூடு விழா கண்டது தான் தி.மு.க அரசின் ஒரே சாதனை.” என்றார்,

செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த போது கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய வீடியோ காணொளியை பொதுக் கூட்ட மேடையில் இருந்து ஒளிபரப்பியதோடு, ‘பொதுமக்களே…நீங்களே செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பதையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்துக் கூறியதையும், தமிழக சட்டசபையில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் குறித்து பேசியதையும் பாருங்கள்’ என்றார்.

அப்போது, செந்தில் பாலாஜியைப் பற்றி முதல்வரும், முதல்வரைப் பற்றி செந்தில் பாலாஜியும் விமர்சித்துப் பேசிய வீடியோக்களில் ஸ்க்ரீனில் ஒளிப்பரப்பினர். அதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “இப்படி கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜியை தான் தற்போது முதல்வர் செயல்வீரர் என்று பாராட்டி பட்டம் வழங்குகிறார். பத்து ரூபாய் பாலாஜி தினமும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பெற்று கப்பம் கட்ட வேண்டியவர்களுக்கு சரியாக கப்பம் கட்டுவதால் தான், அவரை இப்படி செயல்வீரர் என்று அழைக்கிறார். இவர்கள் நடத்தும் ஆட்சியின் லட்சணம் அப்புறம் எப்படி இருக்கும்?” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *