மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்திய பாடப்புத்தகத் திருத்தங்களில் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டதாக குற்றச்சாட்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் அலிப்பூரில் உள்ள தனதன்யோ என்ற அதி நவீன அரங்கத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “மதச்சார்பின்மை இந்தியாவின் பொக்கிஷம். குறிப்பாக வங்காளத்தின் பொக்கிஷம். ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத், நஸ்ருல் போன்றவர்கள் இல்லையென்றால் மதச்சார்பின்மை என்பது இந்த மண்ணில் நிகழ்ந்திருக்காது.

வித்யாசாகர் முதல் ராஜா ராம் மோஹன் ராய் வரை பலர் இந்த மண்ணில் அப்படி தான் வாழ்ந்து காட்டிருக்கிறார்கள்.இன்று அந்த அனைத்து ஆளுமைகளுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். நீங்கள் என்னுடன் நின்றால் இன்னும் நிறையச் சாதிக்க முடியும். மற்றவர்களைப்போல நான் எதையும் உடைக்க மாட்டேன். யாருடைய பதவியையும் பறிக்க மாட்டேன். தாஜ்மஹாலையோ,விக்டோரியா நினைவிடத்தையோ திடீரென அகற்ற முடிவெடுக்க மாட்டேன். சமீபத்திய பாடப்புத்தகத் திருத்தங்களில் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது. வரலாற்றை மாற்றும் சக்தி நம்மில் யாருக்கும் இல்லை. அதனால்தான் இந்தியாவின் வரலாறு இந்தியாவின் பொக்கிஷம்.
உங்கள் அனைவரிடமிருந்துதான் நான் எல்லா யோசனைகளையும் பெற்றேன். எனக்கென எதுவும் சொந்தமாக இல்லை. ஆனால் ‘மக்கள் என்னை ஒருபோதும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்’ என்ற நம்பிக்கை இருக்கிறது. மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு திட்டங்களின் நிதி பாக்கியிலிருந்து,. சில நேரங்களில் பணம் வருகிறது. பல நேரங்களில் வருவதில்லை.

2024 வரை போதுமான நிதியைக் கொடுக்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் கொடுக்காமல் இருக்கட்டும். தேவைப்பட்டால் என் அம்மாவிடம் யாசகம் பெறுவேன். ஆனால் டெல்லிக்குச் சென்று யாசகம் பெற மாட்டேன். எப்படியாவது உங்கள் ஆசீர்வாதங்கள், நல்வாழ்த்துகள், ஒத்துழைப்புடன் சமாளிப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.