விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள‌ திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘மாபெரும் தமிழ்கனவு தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமைத் தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ‘சமூக நீதி’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் `திசையும் திசைகாட்டியும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “அரசியல் தத்துவம், வணிகம், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் தமிழர்களுக்கென்ற ஒரு பெருமை வரலாறு முழுமைக்கும் இருந்திருக்கிறது. மேலை நாடுகளுடனான வர்த்தக தொடர்பில் இருந்தவர்கள் தமிழர்கள். சோழர்கள், முடியாட்சி காலத்தில் குடவோலை முறையை கொண்டுவந்து ஜனநாயக தேர்தல் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள்.

நீரை போற்றுவதிலும், சுற்றுச்சூழலை காப்பதிலும், தனிமனித அறம் சார்ந்த ஒழுக்கங்களை காப்பதிலும், மற்ற சமூகங்களுக்கு இணையாகவோ அல்லது பல படிகள் மேலாகவோ வரலாறு முழுமைக்கும் வாழ்ந்திருக்கிறார்கள். மாணவ, மாணவிகள் அடுத்தத்தலைமுறைகள் இந்த மரபுகளின் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய, கனிமொழி எம்.பி., “தந்தை பெரியார், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் கோயிலுக்கு செல்ல போராடியவர். அதுமட்டுமல்லாமல், அனைத்து சாதியினரும் ஏன் கருவறைக்குள் செல்லக்கூடாது என்ற கேள்வி தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த சட்டமாக மாறியது. சமூகத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கக்கூடிய ஒன்று தான் சாதி என்ற கட்டமைப்பு. அந்த உணர்வு முற்றிலும் ஒழிய வேண்டும். சாதியின் பெயராலும், ஆண்-பெண் என்ற பாகுபாட்டினை கலைந்து, ஆர்வம், திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி.

பரிசு

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கனவு எல்லோருக்குமான சமமான நீதி உருவாக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டும் என்பதுதான். சமூக நீதியை நோக்கிய பயணத்தில் ஒன்றாக, உணவுக்கு கஷ்டப்படாமல் பள்ளிக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், நீதிக்கட்சி மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

அதன்பின், பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை உருவாக்கினார். அந்த திட்டம் படிப்படியாக முன்னேற்றம் பெற்று, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின், காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்.

ஒருக் காலத்தில், பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை மறுக்கப்பட்ட நிலைமாறி, தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது.

இது தான் சமூக நீதிக்கான பயணம். இந்த பயணம், இதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து தவறுகள் நடைபெறும், நாம் தவறவிட்ட இடங்கள், விவாதிக்கப்படவேண்டிய இடங்களை, ஒவ்வொரு இடங்களாக கண்டறிந்து, அந்த இடங்களை படிப்படியாக சரி செய்ய வேண்டும். இந்த உலகம் அனைவருக்கும் சமமானது தான் என்பதை உருவாக்குவது வரை செல்லும். அதுதான் உண்மையான சமூக நீதி” எனப் பேசினார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சியில், தமிழ் பெருமிதம் குறித்து உரையாற்றி சிந்தனை மற்றும் திறனை நிரூபித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப்பின் சிறப்பான கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி விருதுகள் வழங்கப்பட்டன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *