நாகர்கோவிலில் ரோட்டோர கடையில் உணவு விற்கும் தன்னை மாநகராட்சி திமுக மேயர் மகேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. “ரோட்டில் போடப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடித்தால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிப்பார்கள். அதை விட்டுவிட்டு ரோட்டோரம் உணவு விற்கும் எங்களை அசிங்கமாக திட்டுகிறார் மேயர் மகேஷ். அவ்வளவு மோசமான என்னிடம் ஏன் ஓட்டுக்கேட்டு வந்தாய் எனக்கேட்டேன். மேயரை மாற்றவேண்டும்” என அவர் ஆவேசமாக பேசியிருந்தார்.

அந்த மூதாட்டி குறித்து விசாரித்ததில் அவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை ஜோஸ்வா தெருவைச்சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது. கிருஷ்ணவேணியிடம் பேசினோம், “எனது வீட்டுக்கு சற்று தள்ளி நான் கடை வைத்திருக்கிறேன். எனது மகன் கல்லூரிக்குச் சென்றுவிட்டு பைக்கை ரோட்டோரம் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றான். நான் கடையில் சர்பத் போட்டுவிட்டு நின்றேன். அப்போது காரில் சென்ற மேயர் மகேஷ் காரை நிறுத்தி, தபேதாரை அனுப்பி என் மகனை திட்டினார். சத்தம் கேட்டு கடையில் இருந்து நான் போய் தபேதாரிடம் என் மகனை ஏன் திட்டுகிறாய் எனக்கேட்டேன். அப்போது காரில் இருந்து இறங்கிய மேயர் மகேஷ் என்னையும், என் கணவரையும் அசிங்கமாக திட்டினார். நானும் பயப்படாமல் எதிர்த்து பதில் பேசினேன். நாங்கள் ஓட்டுப்போட்டுதான் அவர் மேயர் ஆனார். அதனால் நான் பயப்படவில்லை.