உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழர்:
சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் பீரங்கிப் படையைச் சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல், சாகர் பன்னே உள்ளிட்டோர் என்பதும் அவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கமலேஷ் சேலம் மாவட்டம், மேட்டூர் வனவாசி அருகேயுள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் 19 வயதேயான யோகேஷ்குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

சுட்டது யார்?
தூங்கிக்கொண்டிருந்த 4 ராணுவ வீரர்களை சுட்டவர்கள் யார் என்பது பற்றி இருவிதமாக கருத்துகள் நிலவுகின்றன. சக ராணுவ வீரர்கள் இருவரே சுட்டிருக்கிறார் என்று ஒரு செய்தியும், வெள்ளை துணியால் முகம், தலையை மூடி மறைத்துக்கொண்டு ராணுவ முகாமுக்குள் நுழைந்த இருவர், நால்வரையும் சுட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாக மற்றொரு செய்தியும் உலாவருகின்றன. ஆனால், ராணுவத்தினர் தரப்பில் சுட்டவர்கள் யாரென்ற விவரம் இதுவரையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் ராணுவ மேஜர் அசுதோஷ் சுக்லாவின் புகாரின் பேரில், பஞ்சாப் காவல்துறை, `அடையாளம் தெரியாத இருவர்மீது ஐ.பி.சி பிரிவு 302 (கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு’ செய்திருக்கிறது.




பஞ்சாப் காவல்துறை என்ன சொல்கிறது?
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த பதிண்டா காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குராணா, “இது தீவிரவாத தாக்குதல் அல்ல. சம்பவம் தொடர்பான தகவலின் பேரில் காவல்துறையினர் ராணுவ முகாமுக்குச் சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் தெரியவில்லை! மேலும், அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரித்திருக்கிறார்.