`அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படவேண்டும்’ என எதிர்க்கட்சிகள் எழுப்பிய தொடர் கோஷங்களுக்குப் பிறகு, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மோடி உரையாற்றினார். அப்போதும்கூட காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த மோடி, அதானி விவகாரம் தொடர்பாக எதுவும் கூறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தன.

மோடி

இந்த நிலையில் மாநிலங்களவையில் மோடி இன்று உரையாற்றினார். மோடி உரையாற்றத் தொடங்கியபோது எதிர்க்கட்சி எம்.பி-க்கள், `அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்’ எனக் கோஷமிட்டு அமளியில் ஈடுபட, மோடி தொடர்ந்து உரையாற்றிக்கொண்டேயிருந்தார். அப்போது மோடி, “இந்த அவையில் என்ன பேசப்படுகிறது என்பதை இந்த நாடே கவனமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. சில எம்.பி-க்கள் இந்தச் சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் எந்த அளவுக்கு எங்களை நோக்கி சேற்றை வாரி வீசுகிறீர்களோ, அந்த அளவுக்கு தாமரை மலரும்.

2014-ல் நான் பிரதமரானபோது, காங்கிரஸ் எல்லா இடங்களிலும் பிரச்னைகளை உருவாக்கி வைத்திருப்பதைக் கண்டேன். காங்கிரஸ், `வறுமையை ஒழிக்கிறோம்’ எனக் கூறி, நான்கு தசாப்தங்களாக ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்களின் முன்னுரிமை என்பது பொதுமக்களுக்குத்தான். இதன் காரணமாகவே நாட்டிலுள்ள 25 கோடி குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினோம். உண்மையான மதச்சார்பின்மை என்பது அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியுடைய அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதிசெய்வதுதான்.

மோடி

நாட்டில் 110 ஆர்வமுள்ள மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். தொடர்ச்சியான கவனம் மற்றும் செயல்திறன் மதிப்பாய்வுகள் காரணமாக இந்த மாவட்டங்களில் கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியவை மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 3 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் பயனடைந்திருக்கின்றனர். நாடு எங்களுடன் இருக்கிறது. மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து, அவ்வப்போது தண்டித்து வருகின்றனர். பழங்குடியினருக்காக காங்கிரஸ் நல்ல நோக்கத்துடன் செயல்பட்டிருந்தால், 21-ம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் நான் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

காங்கிரஸின் பொருளாதார, சமூக, அரசியல் கொள்கைகள் ஆகியவை வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். எதிர்க்கட்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு எதிரானவை. அவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை, தங்களின் அரசியலைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இன்று, 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பாதுகாப்புத்துறையில் வந்திருக்கின்றன. இந்த துறையில் நம் நாடு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

மோடி – காங்கிரஸ்

சில்லறை வணிகம் முதல் சுற்றுலா வரை ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைத்துக்கொள்வதற்கு காந்திகள் ஏன் அச்சப்படுகிறார்கள்… முன்பு 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் காந்தி, நேருவின் பெயர்களில் இருந்தன. ஆனால், இன்று அரசு திட்டங்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதால் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஆட்சியிலிருந்த எந்தக் கட்சி மற்றும் ஆட்சியாளர், அரசியலமைப்பின் 356-வது பிரிவை தவறாகப் பயன்படுத்தியது… தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் 90 முறை கவிழ்க்கப்பட்டன… அதை செய்தவர்கள் யார்… ஒரு பிரதமர் மட்டும் 50 முறை 356-வது பிரிவைப் பயன்படுத்தினார். அவரின் பெயர் இந்திரா காந்தி. இந்திரா காந்திதான் அரசுகளைக் கலைப்பதில் அரைசதம் கண்டவர்” என்றார்.

இந்திரா காந்தி

தொடர்ந்து தி.மு.க எம்.பி-க்களைப் பார்த்துப் பேசிய மோடி, “கருணாநிதியின் அரசை கவிழ்த்தவர் இந்திரா காந்தி. அத்தகைய இந்திரா காந்தி கட்சியுடன் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள். அதேபோல, எம்.ஜி.ஆர் ஆட்சியையும் காங்கிரஸ் நீக்கியது.

மோடி

சரத் பவாரின் கட்சி இப்போது எதிர்க்கட்சியின் வரிசையில் இருக்கிறது. சரத் பவார் முதல்வராக இருந்தபோது அவருடைய ஆட்சியையும் கலைத்தது காங்கிரஸ்தான். அதேபோல் ஆந்திராவில் என்.டி.ராமாராவின் அரசை காங்கிரஸ் கலைத்தது. மேலும், கேரளாவில் இடதுசாரிகளின் அரசை நேரு கலைத்தார். இப்போது பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் ஒருகாலத்தில், அந்த கட்சிகளின் மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது” என்று கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *