தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் கு.நல்லதம்பி, பா.ஜ.க வேட்பாளர் பொன்.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

கடந்த முறை, மூன்று லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றும் தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற விமர்சனம், சிட்டிங் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் மீது இருக்கிறது. அவரது சுமாரான செயல்பாடுகள், தற்போது வேட்பாளராகியிருக்கும் சசிகாந்த் செந்திலுக்கு எதிராகியிருப்பது மைனஸ். அதேசமயம், தி.மு.க-வின் செல்வாக்கு, விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள், சசிகாந்த் செந்தில் மீதான ஈர்ப்பு, கூட்டணிக் கட்சியினரின் சுறுசுறுப்பான களப்பணிகள் ஆகியவை அவருக்குப் ப்ளஸ்.

கடந்த தேர்தல்களில், வலுவான வாக்குவங்கியை அ.தி.மு.க நிரூபித்திருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க களமிறங்காமல், கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வின் நல்லதம்பியை நிறுத்தியிருக்கிறார்கள். நல்லதம்பியை வெற்றிபெற வைக்க ஆர்வம் காட்டாததோடு, அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் அ.தி.மு.க-வினர். தொகுதிக்குள் வாக்குவங்கி வைத்திருக்கும் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதமும் சீட் கிடைக்காத வருத்தத்தில், முறுக்கிக்கொண்டு நிற்கிறது. இவற்றோடு வெளியூர் வேட்பாளர் என்கிற இமேஜும் நல்லதம்பிக்கு மைனஸ். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா ஆகியோரின் பிரசாரத்துக்குப் பிறகு தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பிக்குக் கொஞ்சம் உற்சாகம் பிறந்திருக்கிறது.

திருவள்ளூர் நச் நிலவரம்

திருவள்ளூரில் பா.ஜ.க-வுக்கு அமைப்புரீதியான கட்டமைப்பு இல்லை. வேட்பாளர் பாலகணபதியும் தொகுதிக்கு அறிமுகமில்லாதவர். கூட்டணிக் கட்சியான பா.ம.க-வும் தாங்கள் போட்டியிடும் காஞ்சிபுரத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால், ஆதரவின்றித் தனித்துவிடப்பட்டிருக்கிறார் பாலகணபதி.

கூட்டணிக் கட்சிகளின் பலத்தால், களத்தில் சசிகாந்த் செந்திலின் `கை’ ஓங்கியிருக்கிறது. நல்லதம்பி இரண்டாம் இடத்தைப் பெறுகிறார். இளைஞர்கள், மீனவர்கள், வாக்குகளை கணிசமாக அறுவடை செய்வதோடு, அடித்தட்டு மக்களை நோக்கி தீவிரமாகப் பிரசாரம் செய்வதால், பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாமிடத்துக்கு முந்துகிறார் நாம் தமிழர் கட்சியின் ஜெகதீஷ் சந்தர்!

தி.மு.க-வில் கதிர் ஆனந்த், பா.ஜ.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வில் பசுபதி, நாம் தமிழர் கட்சியில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் காணும் கதிர் ஆனந்த், கடந்த தேர்தலில் தோல்விக்கு மிக அருகில் சென்று கடைசி நேரத்தில்தான் வெற்றிபெற்றார். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கி, கதிர் ஆனந்துக்குக் கடும் போட்டியை ஏற்படுத்திய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி நலத்திட்டங்களைச் செயல்படுத்தாதது, பிரசாரத்தில் தேவையற்ற சர்ச்சைப் பேச்சுகள் ஆகியவை கதிருக்கு மைனஸாகப் பார்க்கப்படுகின்றன.

அதிருப்தியைச் சரிக்கட்ட அவருடைய தந்தை துரைமுருகனே சுற்றிச் சுழன்று வாக்கு சேகரிக்கிறார். ‘பூத்’வாரியாக தி.மு.க-வின் பலமான கட்டமைப்பும், பட்டியல் சமூக வாக்குகள் மற்றும் தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளும் கதிருக்குக் கைகொடுக்கின்றன.

கடந்த இரண்டு முறை தொடர் தோல்வியால் ஏற்பட்டிருக்கும் அனுதாபம், பசை  பலம் ஆகியவை ஏ.சி.சண்முகத்துக்கு ப்ளஸ். மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது, தனக்காகப் பிரதமர் மோடியே வாக்கு சேகரித்தது, கணிசமாக இருக்கும் வன்னியர் வாக்குகள் பா.ம.க-வால் திரள்வது, முதலியார் சமூக வாக்குகளின் ஆதரவு போன்றவையால் ஏ.சி.எஸ் முகத்தில் சிரிப்பு வெளிப்படுகிறது. ஆனாலும், தொகுதியிலுள்ள சிறுபான்மையினர் வாக்குகள் அவருக்கு மைனஸ்தான்.

வேலூர் நச் நிலவரம்

அ.தி.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் பசுபதிக்குக் கட்சி வாக்குகள் மட்டுமே ப்ளஸ். மக்களுக்குப் பெரிய அளவில் அறிமுகமில்லாதவர், கூட்டணி பலவீனமாக இருப்பது மைனஸ். தனது சக்திக்கு மீறி ‘தாராளம்’ முடியாததால், பிரசாரக் களத்திலும் தொய்வடைந்து காணப்படுகிறார் பசுபதி. இந்த நிலையில், சொந்தக் கட்சியின் நிர்வாகிகளே பா.ஜ.க-வுக்கு அண்டர்கிரவுண்டில் வேலை செய்துவருவது பசுபதிக்குப் பின்னடைவைத் தருகிறது.

தற்போதைய சூழலில், தந்தை தோள் அமர்ந்து சவாரியில் முந்துகிறார் கதிர் ஆனந்த். கூட்டணி பலத்தால் அவரோடு முட்டி மோதி இரண்டாம் இடம் பெறுகிறார் ஏ.சி.சண்முகம். நாம் தமிழர் ரேஸிலேயே இல்லாததால் ஈஸியாக மூன்றாம் இடம் பெறுகிறார் அ.தி.மு.க-வின் பசுபதி!

தி.மு.க-வில் ச.முரசொலி, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், பா.ஜ.க-வில் எம்.முருகானந்தம், நாம் தமிழர் சார்பில் ஹுமாயுன் கபீர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்!

தி.மு.க-வில், சிட்டிங் எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சீட் கிடைக்காததால், அவர்களின் ஆதரவாளர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல், தேர்தல் செலவுக்கு முரசொலியிடம் போதுமான ‘பலம்’ இல்லாதது ஆகியவை அவருக்கான மைனஸ்.

இந்த நிலையில், பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலினும் உதயநிதியும், ‘கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி’யே தஞ்சாவூரில் போட்டியிடுவதாக எண்ணிக்கொண்டு, ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முரசொலியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என சென்டிமென்ட்டாகப் பேசியது தொண்டர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும், ‘அதிக வாக்குகள் பெற்றுத் தரும் மாவட்டச் செயலாளருக்கு ஆறு பவுன் தங்கச் சங்கிலி அணிவிப்பேன்’ எனப் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்த பிறகு, கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வது வேட்பாளர் முரசொலிக்குப் ப்ளஸ்.

தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், தொகுதி மக்களுக்குப் பரிச்சயமில்லாதவர். அவரது அணுகுமுறை காரணமாக, அ.தி.மு.க-வினருடனான கெமிஸ்ட்ரியும் வொர்க்அவுட் ஆகவில்லை. இதற்கிடையே, தே.மு.தி.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்துவந்த டாக்டர் ராமநாதன், சீட் கிடைக்காத அதிருப்தியில் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டார். இந்த நிலையில், அ.தி.மு.க-வின் வாக்குவங்கி, விஜயகாந்துக்கு நிலவும் அனுதாபம் மட்டுமே சிவநேசனுக்கான நம்பிக்கை!

எம்.முருகானந்தம், தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர். கணிசமான வாக்குவங்கி வைத்திருக்கும் அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அங்கம் வகிப்பது கூடுதல் பலம். ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன் செல்வாக்கை நிரூபிக்க, தீவிரக் களப்பணியாற்றிவருகிறார்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடிப் பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் அகமுடையார் வாக்குகளும், வைட்டமின் ‘ப’-வும் முருகானந்தத்துக்கு ப்ளஸ். அதேசமயம், பா.ஜ.க மீதான பொதுமக்களின் எதிர்ப்பு மனநிலை, விலகி நிற்கும் சிறுபான்மையினர் வாக்குகள், `பூத்’களில் வேலை செய்வதற்குக்கூட ஆட்கள் இல்லாதது போன்றவை மைனஸ்.

தற்போதைய நிலவரப்படி, களத்தில் ‘முரசொலி’ முந்திச் செல்கிறார். முருகானந்தமும் சிவநேசனும் இரண்டாம் இடத்துக்கான ரேஸில் இருக்கிறார்கள்!

தி.மு.க வேட்பாளராக ஈஸ்வரசாமி, அ.தி.மு.க-வில் கார்த்திகேயன், பா.ஜ.க-வில் வசந்தராஜன், நாம் தமிழர் கட்சியில் சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தனது நிழலாக வலம்வரும் ஈஸ்வரசாமியை வேட்பாளராக்கி யிருக்கிறார் தொகுதிப் பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணி. ஆனால், ஆழியாறு தண்ணீரை ஒட்டன்சத்திரத்துக்குக் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகளிடம் ஏற்பட்ட எதிர்ப்பால், சக்கரபாணி திரைமறைவிலேயே வேலைசெய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உட்கட்சிப் பிரச்னைகளும், கிராமப்புறங்களில் தி.மு.க பலவீனமாக இருப்பதும் ஈஸ்வரசாமிக்கு மைனஸ். அதேசமயம், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் சுமார் 3 லட்சம் பெண்கள் பயனடைந்திருப்பதால், பெண்கள் வாக்கு கணிசமான எண்ணிக்கையில் வந்துசேரும் என்று கணக்கு போடுகிறார் ஈஸ்வரசாமி.

அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வால்பாறை, பொள்ளாச்சி தவிர மற்ற பகுதிகளில் அறிமுகமில்லை. ஆனால், தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க-வினர் என்பதும், அவர்களில் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தாமோதரன் ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள் என்பதும் கூடுதல் பலம். தவிர, தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்னைகளை தி.மு.க சரியாகக் கையாளாததால் ஏற்பட்டிருக்கும் அதிருப்திகள் அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ்ஸாக மாறலாம். ஆனால், அவற்றை அறுவடை செய்யும் அளவுக்கு தொண்டாமுத்தூர் தவிர வேறெங்கும் அ.தி.மு.க-வினர் வேகம் காட்டுவதில்லை என்பது பெரும் குறை.

பா.ஜ.க வேட்பாளர் வசந்தராஜன், ஸ்வீட் பாக்ஸுகளை இறக்கி வேகம் காட்டுகிறார். கிராமப்பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்வது, ஸ்டிக்கர் ஒட்டுவது எனச் சுறுசுறுப்புடன் சுழன்றுவருகிறார். கோவையில் அண்ணாமலைக்கு நடக்கும் பிரசாரச் சத்தம் கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதியின் எல்லையோரப் பகுதிகள் வரை கேட்கும்; அதன் மூலம் தனக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் வசந்தராஜன். இருந்தும், பொள்ளாச்சியில் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களுக்கு இருக்கும் செல்வாக்கு தாமரைக்கு இல்லை.

கள நிலவரப்படி, தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மைச் சமுதாய வாக்கு, கூட்டணி செல்வாக்கு, 

அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என மூன்றாகப் பிரியும் தி.மு.க-வின் எதிர்ப்பு வாக்குகள், ‘ஸ்வீட் பாக்ஸ்’ விளைவு எனப் பல சாதகங்களால் பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமியே வெற்றிக்கனியைப் பறிக்கிறார்.  இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் வரிசையில் வருகின்றன!

தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி கனிமொழி, அ.தி.மு.க-வில் சிவசாமி வேலுமணி, பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியில் ரொவினா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க-வைத் தவிர மற்ற மூன்று கட்சி வேட்பாளர்களுமே மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகமில்லாதவர்கள் என்பதே கனிமொழிக்குக் கூடுதல் தெம்பைத் தருகிறது. ஆனால், தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியாகப் பெரிய திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அதேநேரம், கடந்த டிசம்பரில் பெய்த பெருமழை வெள்ளத்தின் போது கனிமொழி ஆற்றிய மீட்புப்பணிகள் அவரது இமேஜை உயர்த்தியிருக்கின்றன.

“இந்தத் தொகுதியில் கலைஞரே போட்டியிடுவதாகத்தான் அர்த்தம். எனக்கு வெற்றி மட்டும் முக்கியமல்ல. அதிக வாக்கு வித்தியாசம்தான் முக்கியம்” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதற்கு இணங்க, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் ஆகியோர் கடுமையாக வேலை செய்கிறார்கள்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் சகோதரி மகன், முன்னாள் தி.மு.க எம்.பி ஜெயதுரையின் உடன் பிறந்த சகோதரர் எனும் அடையாளம் சிவசாமி வேலுமணிக்கு ப்ளஸ். ஆனால், சென்னையில் எலும்புமுறிவு சிகிச்சை மையம் நடத்திவரும் இவரை, உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கே பெரிய அளவில் தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் அவர் ‘சிக்கனம்’ காட்டுவதால், கட்சியினர் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. ‘அவருக்கு அ.தி.மு.க வாக்குகளாவது முழுமையாகக் கிடைக்குமா..?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர் விஜயசீலன், பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளராகக் களம் காண்கிறார். கடந்த முறை பா.ஜ.க போட்டியிட்ட தொகுதியை இவர்கள் வாங்கிவிட்டார்களே என்ற அதிருப்தியில், தேர்தல் பணிகளில் பா.ஜ.க-வினர் சுணக்கம் காட்டிவருவது அவருக்கு மைனஸ்.

நா.த.க வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன், பிரசாரத்தில் வாய் திறக்கத் தயங்கினாலும், சீமானின் தம்பிகள் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

மீனவர் வாக்குகளை அ.தி.மு.க-வும், இந்து நாடார் சமூக வாக்குகளை த.மா.கா-வும் டார்கெட் செய்கின்றன. இவர்களுக்கிடையே பட்டியலினத்தவர், கிறிஸ்துவ நாடார், இஸ்லாமியர் ஆகியோரின் வாக்குகள் கனிமொழிக்குச் சாதகமாவதால், வெற்றிக்கனியைப் பறிக்கிறார் கனிமொழி. இரண்டாம் இடத்தை அ.தி.மு.க-வும், மூன்றாம் இடத்தை  த.மா.கா-வும் கைப்பற்றுகின்றன!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *