மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகளின் சிவசேனா (உத்தவ்) கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. சிவசேனா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மும்பையில் தென் மத்திய மும்பை தொகுதியைக் கேட்டது. ஆனால் அத்தொகுதிக்கு உத்தவ் தாக்கரே ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்து, அத்தொகுதியை கொடுக்க முடியாது என்று அறிவித்துள்ளார். அதோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேசிக்கொண்டிருக்கும்போதே சாங்கிலி தொகுதிக்கு வேட்பாளரை உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சாங்கிலி தொகுதி தங்களுக்கு வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்கிறது.

ஆனால் கொடுக்க மறுத்து உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் சாங்கிலி தொகுதியில் இரு கட்சிகளும் நட்புரீதியில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் தெரிவித்தது. இது குறித்து உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “‘சாங்கிலி தொகுதியை கேட்பதை காங்கிரஸ் கைவிடவேண்டும். அப்படி இல்லாவிட்டால் சாங்கிலி தொகுதிக்கு கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிடுங்கள். நட்புரீதியிலான போட்டிக்கு வாய்ப்பு இல்லை. மும்பையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கு மும்பைக்கு காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லையெனில், எங்களது கட்சி வேட்பாளரை நிறுத்தும்.

ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ்

ஏக்நாத் ஷிண்டே – பட்னாவிஸ்

நாட்டில் சர்வாதிகாரத்திற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே வடக்கு மும்பை தொகுதியில்கூட எதிர்க்கட்சிகளால் வெற்றி பெற முடியும். செய்துகொண்ட ஒப்பந்தப்படி காங்கிரஸ் தேர்தல் பணிகளை தொடங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக பா.ஜ.க ஜல்காவ் எம்.பி உமேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனாவில் சேர்ந்தார்.

ஆளும் பா.ஜ.க கூட்டணியிலும் இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை. இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அஜய் சவான் கூறுகையில், “நாசிக், ரத்னகிரி, கல்யான், வாசிம் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 45 தொகுதிகளில் வெற்றிபெறும்” என்றார். நாசிக் தொகுதியை தற்போது எம்.பி-யாக இருக்கும் ஹேமந்த் கோட்சே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதில் அமைச்சர் சகன் புஜ்பாலை நிறுத்த பா.ஜ.க முயன்று வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *