சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “உலக அளவில் இந்தியா அதிக மக்கள் தொகையுடன் பெரிய நாடாக இருப்பதுபோல், இந்தியா கூட்டணி அதிக கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து வலுவாக உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து விடுதலைக்காக போராடினோம்.

அதேபோல் இன்று மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள், தோல்வி பயத்தால் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தவில்லை. காஷ்மீரில் தொடங்கிய பா.ஜ.க-வின் தோல்வி கன்னியாகுமரி வரையிலும் எதிரொலிக்கும். பா.ஜ.க வலுவாக உள்ள குஜராத்தில்கூட பா.ஜ.க அறிவித்த வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சராக உள்ள ஓய்வுபெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங்கை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்தும், அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அதற்கு மோடியின் எதிர்ப்பு அலை, தோல்விபயம் தான் காரணம். நாட்டிலேயே தூக்கம் இல்லாமல் இருப்பவர் பிரதமர் மோடி மட்டுமே. டெல்லியின் துணை முதல்வர் 13 மாதங்களாக சிறையில் உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரான பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் ஹேமந்த் சோரானை, ரவுடியைப்போல தேடிப்பிடித்து அமலாக்கத்துறை கைது செய்கிறது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதுசெய்து, 8 மாதங்களாக சிறையில் வைத்திருக்கின்றனர். பிரதமரிடம் கேட்காமல் முதல்வரை எப்படி கைது செய்வார்கள். தேர்தல் பத்திரம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியாகப் பெற்ற விவகாரத்தில் ஜே.பி.நட்டாவை பிரதமர் மோடியை ஏன் கைது செய்யவில்லை. பா.ஜ.க-வை விமர்சித்தால் தேசவிரோதி என்று கூறும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நியாயமாக பதில் சொன்னதில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்திற்கு சென்ற ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அவர் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். நாட்டில் மதவெறியை தோண்டி சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய ஆட்சி நடக்கிறது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *