அந்த நிலையில், செப்டம்பர் 11-ம் தேதி சீன ராணுவத்தினர் அறிவிக்கப்படாத தாக்குதலை இந்திய ராணுவத்தினர்மீது நடத்தினர். மேலும், இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் (அப்போது தனிநாடாக இருந்தது) எல்லையை நோக்கி முன்னேறியது. இரு நாடுகளுக்குமிடையே கடுமையான யுத்தம். மலைப்பகுதியின் மேல்பகுதியிலிருந்து தாக்குதல் நடத்திய இந்தியா, பள்ளத்தில் இருந்த சீன வீரர்களை துவம்சம் செய்தது. மூன்று நாள்கள் மட்டுமே நடந்த இந்தப் போரில் சுமார் 300 சீன ராணுவத்தினருக்கு வீர மரணத்தைப் பரிசளித்தது இந்தியா. அதேசமயம், இந்தியத் தரப்பில் 83 பேர் உயிரிழந்தனர். முடிவில், சிக்கிமிலிருந்து பின்வாங்கியது சீனா. பின்னர், இரு நாடுகளுக்குமிடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, போரும் முடிவுக்கு வந்தது. கடந்த முறை நடந்த போரில் பெரும் சரிவைச் சந்தித்த இந்தியா, இந்த முறை எகிறி அடித்திருந்தது. இந்தியா மட்டுமல்ல… காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவும் எகிற ஆரம்பித்திருந்தார்.

இந்தியா - சீனா போர்

இந்தியா – சீனா போர்

இந்திரா காந்திக்கும், காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்குமிடையே முட்டல் மோதல் விரிவடையத் தொடங்கியது. குறிப்பாக, மூத்த தலைவர் மொரார்ஜி தேசாய்க்கும் இந்திராவுக்கும் இடையில் தொடக்கம் முதலே பிணக்கு இருந்தது. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு பிரதமராகிவிடலாம் என்றிருந்த மொரார்ஜியின் நினைப்பில் நீரூற்றி, காமராஜர் ஆதரவுடன் பிரதமரானார் இந்திரா. 1967 தேர்தல் வெற்றியின்போதும் பிரதமர் பதவிக்குக் காய்நகர்த்திய மொரார்ஜியின் முகத்தில் கரியைப் பூசி இந்திராவே மீண்டும் பிரதமராக, தேசாய்க்கு துணைப் பிரதமர் பதவியே ஆறுதல் பரிசாகக் கிடைத்திருந்தது. இந்த முன்பகையையெல்லாம் சேர்த்து இந்திரா காந்திக்குக் குடைச்சல் கொடுத்துவந்தார் மொரார்ஜி. மேலும், இந்திரா தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்பட முடியாதபடி அவருக்கு டிரான்ஸ்பரன்ட் கால்கட்டு போட்டிருந்தது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபீடமான சிண்டிகேட் குழு. அதாவது, காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களை உள்ளடக்கிய சிண்டிகேட் குழுதான் கட்சி, ஆட்சி என அனைத்து விவகாரங்களிலும் அதிகாரம் செலுத்தி, இறுதி முடிவுகளை எடுத்துவந்தது.

இவர்களுக்கு முன்னால் இந்திரா சொல்லும் முடிவுகளெல்லாம் செல்லுபடியாகவில்லை. இவையெல்லாம் பிரதமராக இருந்த இந்திராவுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கேற்ப, எதிர்க்கட்சிகளும் இந்திராவை `பேசா பொம்மை’ என்றே விமர்சித்துக்கொண்டிருந்தன.

இந்திரா காந்தி - மொரார்ஜி தேசாய்

இந்திரா காந்தி – மொரார்ஜி தேசாய்

இனியும் இவர்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார் இந்திரா காந்தி. அதேசமயம், குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன் திடீர் மரணமடைய, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆரம்பமானது. உண்மையில், இது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக, இந்திரா காந்தி Vs மூத்த தலைவர்களுக்குமான `நீயா…நானா என்ற அதிகாரப் போட்டி’யாக உருமாறியிருந்தது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக ஜெகஜீவன் ராமைக் கொண்டுவர இந்திரா காந்தி நினைத்தார். ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவர்களோ நீலம் சஞ்சீவ ரெட்டியை முன்னிறுத்தினர். நிச்சயம் இப்படி ஏதாவது நடக்கும் என முன்பே யூகித்திருந்த இந்திரா காந்தி, `சரி’ எனத் தலையாட்டிவிட்டு, பின்னர் தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்தார். ஒன்றல்ல… ஒன்றன் பின் ஒன்றாகப் பல!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *