பெங்களூரு: அரசு போக்குவரத்து பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மன அழுத்தத்தை போக்க விளையாட்டு பகுதி உட்பட பல வசதி களை, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவக்கி வைத்தார்.

பெங்களூரு சாந்தி நகர் பஸ் நிலையத்தில், போக்குவரத்து ஊழியர்கள் மன அழுத்தத்தை போக்க, விளையாட்டு பகுதியை போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவக்கி வைத்தார்.

இந்த காம்ப்ளக்சில் பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் உட்பட பல விளையாட்டுகள் விளையாடலாம். இதற்காக, 69.07 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து துறைக்காக, டிக்கெட், பாஸ்கள், ஸ்டேஷனரி பொருட்களுக்காக, 1952ல் பிரின்டிங் பிரசை, போக்குவரத்து கழகம் துவக்கியது. இந்த பிரஸ், 39.83 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.

தற்போது இங்கு டிக்கெட், இ.டி.எம்., ரோல்கள், லெட்டர் பேட்கள், விசிட்டிங் கார்டுகள், நிர்வாகம் மற்றும் கணித அறிக்கைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது

அரசு பஸ்கள் விபத்தில் சிக்கினால், அதிகாரிகள் உடனடியாக அங்கு செல்ல 15 பொலீரோ ஜீப்கள் வாங்கப்பட்டுள்ளன. கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு உட்பட்ட 83 டிப்போக்களுக்கு ஏற்கனவே 50 பொலிரோ ஜீப்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கட்டண உயர்வில்லை

பின், அமைச்சர் ராமலிங்க ரெட்டி அளித்த பேட்டி:

கொரோனாவால் நிதி நெருக்கடியில் இருந்த நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் நிதி மீட்புக்கான வாய்ப்பை, ‘சக்தி’ திட்டம் வழங்கி உள்ளது. சக்தி திட்ட டிக்கெட் கட்டணத்தை அரசு வழங்கி விடுவதால், நான்கு போக்குவரத்து கழகங்களின் வருவாய், 15 – 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்த, எந்த போக்குவரத்து கழகமும் முன்வரவில்லை.

புதிய பஸ்கள் வாங்குவது, பழைய பஸ்களை பழுது பார்ப்பது போன்ற பணிகள் நடந்தாலும், பஸ் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து, போக்குவரத்து கழகங்கள் யோசிக்கவில்லை.

கடந்த 2013, 2015ல் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. பின், டீசல் விலை, கூலி, உதிரி பாகங்கள் விலை அதிகரித்தது. அப்போதும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேவேளையில், ஒரு போக்குவரத்து கழகம் மட்டும், 2020ல் கட்டணத்தை உயர்த்தியது. அதன் பின், உயர்த்தவில்லை.

இவ்வாறு அவர்கூறினார்.

கர்நாடகாவில் பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் ‘சக்தி’ திட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இத்திட்டத்துக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில், 2,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டிசம்பர் 15ம் தேதி வரை 115 கோடி பெண்களுக்கு மேல் பயணித்துள்ளனர். இதற்கான தொகையை மாதந்தோறும், நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு வழங்கி வருகிறது.

இந்த நிதியாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக நிதி ஒதுக்கும்படி, மாநிலத்தின் நான்கு போக்குவரத்து கழகங்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *