தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலஆத்தூரை சேர்ந்த மாணிக்கராஜ் மகன் பழனிக்குமார் 30. கேரளாவில் இரும்பு கடை நடத்திவந்தார். இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமையா மகள் முத்துமாரிக்கும் 21, ஏப்.10ல் திருமணம் நடந்தது. இவர்கள் நேற்று முன்தினம் மேல ஆத்தூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள நீர்தேக்கத்திற்கு சென்றனர்.
அங்கு முத்துமாரி அலைபேசியில் செல்பி எடுக்கும்போது கால் தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற பழனிக்குமாரும் நீரில் மூழ்கினார். இருவரும் மூச்சு திணறி இறந்தனர். இவர்களை காணாது குடும்பத்தினர் தேடியநிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் நீர்தேக்கத்தில் இரண்டு உடல்களும் மீட்கப்பட்டன. திருமணமாகி 3வது நாளிலேயே நீரில் மூழ்கி தம்பதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி சப் கலெக்டர் கவுரவ்குமார் விசாரித்தார்.
பழநியில் டாக்டர் வீட்டில் புகுந்து 100 பவுன், ரூ.20 லட்சம் கொள்ளை
பழநி அண்ணா நகர் பகுதியில் உதயகுமார் வசிக்கிறார். மனைவி ரேவதி. மகள் படிப்பிற்காக வெளியூரில் தங்கி உள்ளார். உதயகுமார் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று நள்ளிரவு 2:30 மணிக்கு வீட்டின் ஜன்னலை உடைத்து உள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல், துாங்கி கொண்டிருந்த டாக்டர் உதயகுமாரை எழுப்பி உள்ளது.
பின்னர் அவரை கத்தியால் தாக்கி பீரோ சாவியை பறித்துள்ளனர். இதன் பின் பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த உதயகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேவதி பழநி வந்த பிறகுதான் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
விழுப்புரம் வாலிபர் கொலையில் மனைவியின் நண்பர் கைது
விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயந்தன், 29, நங்கநல்லுாரில் தங்கி, சென்னை விமான நிலையத்தில் தாய் ஏர்லைன்சில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 18ல் மாயமான இவரை, பழவந்தாங்கல் போலீசார் தேடினர். விசாரணையில், ஜெயந்தன் மனைவியான பாக்கியலட்சுமி, 38, அவரது நண்பரான நாகையைச் சேர்ந்த சங்கர், 45, என்பவருடன் சேர்ந்து, ஜெயந்தனை கொலை செய்தது தெரிந்தது.
மேலும், புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள், செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் குளத்தில் வீசப்பட்டதும் தெரிந்தது. இவர்களுக்கு உதவியாக, கோவளத்தைச் சேர்ந்த பூசாரி வேல்முருகன் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, பாக்கியலட்சுமியை கைது செய்த போலீசார், சங்கரை தேடி வந்தனர். நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருந்த சங்கரை, பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ‘குடிபோதையில் இருந்ததால், கொலை நடந்த அன்று என்ன செய்தேன் என்றே தெரிவில்லை’ என, திரும்ப திரும்ப, சங்கர் அதையே கூறி வருகிறார். தலைமறைவாக உள்ள பூசாரி வேல்முருகனை, போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் புகாரில் மாணவரும் கைது; பேராசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவு
மதுரை மாவட்டம் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் பேராசிரியர் ஜெகன்கருப்பையா கைதானார். விசாரணையில் மற்றொரு சம்பவம் தொடர்பாக பொருளாதாரத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் கருப்பசாமி நேற்று கைதானார். மேலும் பேராசிரியர்கள் ஞானசேகரன், ஸ்டாலின் தலைமறைவாக உள்ளனர்.
நண்பன் கொலை; தொழிலாளி கைது
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரில், நேற்று முன்தினம் இரவு, 45 வயது மதிக்கத்தக்க ஆண், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்தார். ஈரோடு தெற்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், ஈரோடு, நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ராஜேந்திரன், 48, என்பது தெரிந்தது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே, ‘டாஸ்மாக்’ கடையில், ராஜேந்திரன், தன் நண்பர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி கண்ணன், 45, என்பவருடன் மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் தாக்கியதில், ராஜேந்திரன் இறந்தது தெரியவந்தது. கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரனுக்கு, மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
500 கொள்ளை நடத்திய ‘சூப்பர் திருடன்’ கைது
புதுடில்லியைச் சேர்ந்த தேவேந்தர் சிங், ஒன்பதாம் வகுப்பு முடித்தவுடன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். கடந்த 1993ல் புதுடில்லியில் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடத் துவங்கிய இவர் போலீசாரிடம் சிக்கினார்.

ஆனால், அவர்கள் கண்ணில் மண்ணை துாவி தப்பிய தேவேந்தர் சிங், சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை என பெரிய நகரங்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டார். இப்படி 500 இடங்களில் தன் கைவரிசையை காட்டினார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கிய தேவேந்தர் சிங்கிற்கு, கேரள நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் தண்டனை முடிந்து வெளியே வந்த இவர், புதுடில்லியில் மீண்டும் கைவரிசையை காட்டி, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பினார். இந்த குற்றச்சாட்டில் அவரை தேடி வந்த போலீசார், நேற்று அவரை 500 கி.மீ., துரத்திச் சென்று, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் கைது செய்தனர்.
பாக்.,கில் குண்டு வெடித்து 3 குழந்தைகள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் நகரம் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ளது. இங்கு, ஆப்கன் அகதிகள் தங்கியுள்ள வீட்டின் முன் நேற்று சில குழந்தைகள் விளையாடினர். அப்போது அங்கு கிடந்த வெடிகுண்டு ஒன்றை எடுத்து, அது பந்து என நினைத்து விளையாடியபோது, அது திடீரென வெடித்து சிதறியது. இதில், மூன்று குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அமெரிக்க ரகசிய தகவல்களை வெளியிட்ட இளைஞர் கைது
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ‘நேட்டோ’ நாடுகள் வழங்கிய உதவிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டது தொடர்பாக, ஜேக் டெக்சீரியா என்ற 21 வயது இளைஞர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ‘மாசாசூசெட்ஸ் ஏர் நேஷனல்’ பிரிவில் முதல் தர விமானப் படை வீரரான ஜேக், ராணுவ தொலை தொடர்பு நெட்வொர்க் மற்றும் கேபிளிங் மையங்களை கையாளும் திறன் கொண்டவர் என கூறப்படுகிறது.