வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மாபியா கும்பலாக மாறிய அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் கூட்டாளி குலாம் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். உ.பி.,யில் மாபியா கும்பலை ஒழிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக மாபியா கும்பலாக மாறிய அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் வரை போலீசார் சன்மானமும் அறிவித்தனர். ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மாபியா கும்பலை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் 2017 முதல் 178 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதே காலக்கட்டத்தில் என்கவுன்டரின்போது 4,911 பேர் காயமடைந்துள்ளதாகவும், 23,069 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாபியா கும்பலை பிடிக்கும் முயற்சியில் 15 போலீசார் பலியானதாகவும், 1,424 போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மாபியா கும்பலை ஒழிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
Advertisement
