சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மா. ஆன்மிகம், கலாசாரத்தின் தலைநகரம். 3,500 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ் இலக்கியத்தைக் கவனித்தால், யமுனை, இமாலயம், கங்கா எனப் பாரதத்தின் பல குறிப்புகள் இருக்கும்.

அதே போல சம்ஸ்கிருத இலக்கியத்தில் தமிழ்நாடு பற்றிய குறிப்புகள் இருக்கும். என் பாட்டி, என் அம்மா ஆகியோர்கூட தமிழ்நாட்டில் இருக்கும் ராமேஸ்வரம், காஞ்சிபுரம் நகரங்களுக்கு வந்திருக்கிறார்கள். மற்ற மாநிலத்தவர்கள் ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வரவேண்டும். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 50,000 மக்கள் காசி – ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறார்கள்.
40,000 தமிழ் மரபினர் பல நூற்றாண்டுகளாக காசியிலும், மணிப்பூரிலும் வசித்து வருகிறார்கள். அதே போலத்தான் தமிழ்நாட்டில் பல்வேறு மாநில மக்கள் வசித்து வருகிறார்கள். உதாரணமாக தஞ்சாவூரில் சௌராஷ்டியர்களைக் கூறலாம். பல்லவ மன்னர்தான் இங்கிருந்து சீனாவுக்குச் சென்று புத்த மதத்தைப் பரப்பினார். அங்கிருக்கும் `மார்ஷியல் ஆர்ட்’ எனும் கலையை அறிமுகப்படுத்தினார். அவர்தான் போதி தர்மர். இப்படி இந்த மண்ணில் கலாசாரம், கல்வி, இலக்கியம், ஆன்மிகம் என அனைத்தும் செழித்திருக்கிறது.
சுதந்திரம் பெற்ற பிறகு 1960-களில் இந்தித் திணிப்பு நடந்தது. இந்தியைவிட தமிழ் மிகப்பழைமையானது. பழைமையில் தமிழ் மொழிக்கு நெருக்கமாக இருக்கும் ஒரே மொழி சம்ஸ்கிருதம்தான். வேறு மொழிகளை ஒப்பிட முடியாது. மிகவும் பழைமையான தமிழ் மொழியில் இந்தியைத் திணிக்க முடியாது. இந்தி மட்டுமல்ல, வேறு எந்த மொழியையும் தமிழ்மீது திணிக்க முடியாது. எனவே, தமிழ் இலக்கியங்களை உள்வாங்கி ஆழமாக வாசியுங்கள். அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பலனளிக்கும்” என்று தெரிவித்தார்.