வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சூரத்: ‘மோடி’ எனும் சாதியினரை அவதூறாக பேசிய வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், வரும் 20 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சூரத் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, ‘மோடி’ எனும் சாதியினரை அவதூறாக பேசியதாக ராகுல் மீது , குஜராத் முன்னாள் அமைச்சரும், பா.ஜ., எம்.எல்.ஏ.,வுமான பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், ராகுல், மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து, தண்டனையை 30 நாட்களுக்கு தள்ளி வைத்தும், நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ராகுலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் அதிரடியாக உத்தரவிட்டது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி ராகுல் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பி.மோகேரா, ராகுலின் ஜாமினை நீட்டித்து உத்தரவிட்டதுடன், விசாரணையை இன்றைக்கு(ஏப்.,13) ஒத்திவைத்தார். இன்று விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இந்த வழக்கில் வரும் 20ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
மற்றொரு அவதூறு வழக்கு
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் சாவர்க்கர் குறித்து பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதாக, ராகுல் மீது மஹாராஷ்டிர மாநிலம் புனே நீதிமன்றத்தில் சாவர்க்கர் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
Advertisement
