தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் அல்லாத மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக இருப்பதாக அரசியல் அரங்கில் தொடர் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இங்கே ஆளுநருக்கும், மாநில அரசுக்குமிடையே மோதல் போக்கு வெளிப்படையாகவே நிலவி வருகிறது. ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் போட்டது, அதைக் கண்டித்து ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தது என பல சம்பவங்களை அடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்த அதே நாள், ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய மசோதாவான ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
மேலும், ஸ்டாலின் தனித் தீர்மானத்தின்போது சட்டமன்றத்தில், “குடியரசுத் தலைவரைப் பதவிநீக்க `இம்பீச்மென்ட்’ அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதுபோல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்துக்கும் இம்பீச்மென்ட் அதிகாரம் வழங்கலாமா?” எனக் கடந்த காலங்களில் எழுந்த விவாதத்தை நினைவுபடுத்தினார்.