வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி இன்று (ஏப்.,13) 71 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‛மோடி அரசின் 10வது ஆண்டில் செய்யும் இந்த ஸ்டண்ட் பொருத்தமாக இருக்கிறது’ என விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று (ஏப்.,13) 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அதில், ரயில்வே மேலாளர், ரயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிக்கையில், ‛மோடி மீண்டும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் “ஆட்சேர்ப்பு கடிதங்களை” விநியோகிக்கிறார். இந்த நிகழ்வில், ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து மட்டும் 50,000 கடிதங்கள் வந்துள்ளன. ரயில்வேயில் 3,01,750 காலியிடங்கள் உள்ளன, அரசு அமைச்சகங்களில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்படியிருக்கையில் மிகக் குறைவான அளவிலும், தாமதமாகவும் ஆட்சேர்ப்பு நடத்துகிறார். மோடி அரசின் 10வது ஆண்டில் செய்யும் இந்த ஸ்டன்ட் பொருத்தமாக இருக்கிறது’ என விமர்சித்துள்ளார்.
Advertisement
