சென்னை:

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மின்சார ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும்.

உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கின் போது திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கும். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் 60,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கான இன்று அவசியமின்றி ஊர் சுற்றினால் வழக்குப்பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. முழு ஊரடங்கின் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை பெருநகர போலீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *