சென்னை:

தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அன்னபூரணி செங்கல்பட்டில் ஒரு திருமண மண்டபத்தில் அருள்வாக்கு கூற ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.

ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின.

பாடல்கள் எடிட்டிங்

இவரது பேஸ்புக் வீடியோக்களில் இவருக்காக பாடல்கள் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. தாயி மகமாயி வேதபுர காளி என ஒலிக்கிறது. ஏற்கெனவே விசேஷ காலங்களில் வரும் அம்மன் பாடல்களின் மெட்டை வைத்துக் கொண்டு அதன் வரிகளை அன்னபூரணிக்கேற்ப மாற்றி அமைத்துள்ளார்கள்.

யார் இந்த அன்னபூரணி

இந்த நிகழ்வு வைரலானவுடன் இன்னொரு வீடியோவும் வைரலானது. அதாவது அன்னபூரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்தவர். மற்றொரு பெண்ணின் கணவருடன் சட்டவிரோதமாக அன்னபூரணி வாழ்ந்து வந்ததாக அவரது மனைவி புகாரின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

திருப்போரூர்

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் தேதி அருள்வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

எச்சரிக்கை

இதையடுத்து அந்த மாவட்ட போலீஸார் திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அனுமதித்தால் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என எச்சரித்துள்ளனர். அருள்வாக்கு அன்னபூரணி அம்மா என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *