சென்னை:

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியையாவது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுக தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லாததால் இவ்விவகாரத்தில் சிறுத்தைகளுக்கு சற்றே வருத்தமாம். கடலூர் மேயர் பதவியை குறிவைத்து விடுதலை சிறுத்தைகள் காய் நகர்த்தி வரும் நிலையில், உள்ளுர் திமுகவினர் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

நகர்ப்புற உள்ளாட்சித்

இம்மாதம் இறுதியில் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர் மழை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்க வேண்டியதன் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது.

 

கடலூர் மாநகராட்சி

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறது விடுதலைசிறுத்தைகள். அந்த வகையில் வடதமிழகத்தில் வரக்கூடிய கடலூர் மாநகராட்சியை குறிவைத்து சிறுத்தைகள் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். மேயரை தேர்வு செய்வது நேரடி தேர்தல் மூலமா அல்லது மறைமுகமாகவா என்பதே இன்னும் உறுதியாக தெரியாதபட்சத்தில் இப்போதே அதற்கான அச்சாரத்தை போடத் தொடங்கியுள்ளது வி.சி.க.

 

ஸ்பெஷல் டீம்

ஏற்கனவே மதுரை, திருப்பூர், மாநகராட்சிகளை கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் வேளையில் விசிக கடலூரை கேட்கத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சிகளிடம் கள நிலவரத்தை புரிய வைப்பதற்காகவும், இடப்பங்கீடு பற்றி பேசவும் நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் விரைவில் ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைக்கவுள்ளது திமுக தலைமை.

 

திருமா கண்டிப்பு

இதனிடையே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் ஏறி தாக்கிய நிகழ்வை திருமா கண்டித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. கூட்டணிக் கட்சியை சாடும் வகையில் அவரிடமிருந்து வெளிவந்துள்ள கருத்துக்கு அரசியலில் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *