திராவிடக் கவிஞர் கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்.

 

திராவிடப் புதல்வி என அழைக்கப்படும் கனிமொழி கருணாநிதி .திராவிட இயக்கத்தின் பின்புலத்தில் இருந்து வந்த கனிமொழி தன் தந்தை கருணாநிதியைப் போல, எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இலக்கியம் மற்றும் பத்திரிகை துறையிலும் ஆர்வம் கொண்டு பிறகு தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் ‘தி இந்து’ஆங்கில பத்திரிக்கையிலும் , சிங்கப்பூரில் ‘தமிழ் முரசு’இதழிலும் பணியாற்றியுள்ளார்.அவரது ‘கருவறை வாசனை’ என்னும் கவிதைத் தொகுப்பு கனிமொழியை மிகச் சிறந்த நவீனக் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது.

‘இந்தியா டுடே’ பத்திரிகையில் வெளி வந்து கொண்டிருந்த இவரது எழுத்துக்கள் பின், ‘கறுக்கும் மருதாணி’என்ற தொகுப்பாகவும் வெளி வந்தது.அவரது முற்போக்கான,சமூக, அரசியல் பெண்ணியக் கருத்துக்கள் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அதே சமயம் நவீனத்துவ சிந்தனைகளின் நீட்சியாகவும் அவரை இனம் காட்டியது.

2001 ஆம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.அப்போது சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை வாசலில் தர்ணா போராட்டத்தில் கருணாநிதி ஈடுபட்டபோது அவருக்கு பக்கபலமாக நின்ற கனிமொழியின் புகைப்படங்கள் அவ்வளவு எளிதில் தமிழ் மக்களால் மறக்க முடியாது.

நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது திமுக. டெல்லி தேசிய அரசியலில் தமிழக முகமாய் பார்க்கப்படுகிறார் கனிமொழி.அப்படி பார்க்கப்படும் கனிமொழி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்பது கருணாநிதியின் நீண்ட நாள் ஆசையாகவே இருந்து இருக்கிறது.அதை கனிமொழியிடம் பேசி சம்மதிக்க வைத்தவர் துரை முருகன் ஆவார்.அதுவரை கருணாநிதியின் இலக்கிய வாரிசாக இருந்து வந்த கனிமொழி ,2007 ஆம் ஆண்டு முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி தனது முதல் உரையை நிகழ்த்தினார் கனிமொழி‌.மொத்தமாக பத்து நிமிடம் நீடித்த அந்த உரையில் அனைவரையும் அசர வைத்தார் கனிமொழி.அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்,உங்களுடைய அறிவார்ந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள் என ஒரு சீட்டில் எழுதி கனிமொழியிடம் கொடுக்கச் செய்துள்ளார்.

கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடுகள் வழங்கும் மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி,’நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன்’ எனத் தொடங்கி அவரது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.அப்போது கனிமொழி பேசி கொண்டிருந்தபோது துணை சபாநாயகர் உங்கள் நேரம் முடிந்து விட்டது என ஹிந்தியில் சொல்லவே ,அதற்கு கனிமொழி ‘எனக்கு புரியக்கூடிய மொழியில் பேசவும்’ என பதிலடி கொடுத்தார்.அவரது அந்த பேச்சு பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மிக சமீபத்தில் கூட சாதாரண மக்களுக்கு புரியும்படி,பேச வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி சிரித்து கொண்டே பேசியது அனைவரையும் ஈர்த்து ரசிக்க வைத்தது.அன்றைய தினத்தில் இது பலரது வாட்ஸ்அப் ஸ்டோரியாக இருந்தது.நாடாளுமன்றத்தில் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள் கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் கூறி கனிமொழிக்கு ‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது’ கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் தேர்தலில் நின்று,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை விட மூன்றரை லட்சம் அதிக வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.இப்படியான கனிமொழிக்கும் துயர் பக்கங்கள் சில உள்ளன.2G அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக , கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாதம் பீகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.


ஒருநாள் கனிமொழியிடம் ‘நீங்கள் மிகப்பெரிய அரசியல்வாதி சமைப்பிங்களா ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு கனிமொழி ,என் அப்பா முதலமைச்சராக இருந்திருக்கிறார்.ஆண் அரசியல்வாதிகளிடம் இப்படியான கேள்விகள் எழுப்புவதில்லையே! என்று ஆண் பெண் சமத்துவத்தை பற்றி ஒற்றை கேள்வியால் பதில் அளித்தார்‌.இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடைகள் தனது கவிதைகள் என எல்லாவற்றிலும் பெண்களுக்கான உரிமைகளை பாலின சமத்துவத்தை பேசி வருகிறார்.

கருணாநிதி உயிரிழந்தபோது,அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா ? என சந்தேகம் இருந்தது.அது தொடர்பாக நீதிமன்றம் படி ஏறிய திமுகவிற்கு , சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பைக் கேட்டு ஸ்டாலின் அவர்கள் கைக்கூப்பி அழுதபோது ,கண் முழுக்க கண்ணீருடன் தன் அண்ணனைத் தாங்கி பிடித்த கனிமொழியின்‌ அன்பை எளிதாக யாரும் கடந்து விட முடியாது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கவும்,நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் கனிமொழியால் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.அந்நிகழ்ச்சி பண்பாட்டு ரீதியாக பார்க்கப்பட்டது.இப்படி கருணாநிதி மகள் மற்றும் ஸ்டாலினின் தங்கை என்ற அடையாளத்தை தாண்டி கவிஞர் ,தேர்ந்த அரசியல்வாதி, ஆங்கில புலமை , பெண்ணியவாதி என அரசியலுக்கு அடுத்து கனிமொழியை தனியாக ரசிக்க வைத்தது.

நாடெங்கிலும் திராவிட மாதாவாக கனிமொழி பார்க்கப்படுகிறார்.சமீபமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கனிமொழி பேசிய வார்த்தைகளும் அனைவருக்கும் நல்லதோர் வீச்சாகவே இருந்தது . இன்னும் பல பெண்களுக்கு அரசியலில் ரோல் மாடலாக திகழும் கனிமொழி கருணாநிதிக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *