சென்னை: திஹார் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தே டெல்லி முதல்வராக நிர்வாகத்தைத் தொடர சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றாலும் அது நடத்தை ரீதியாகதவறானது என சென்னை உயர் நீதிமன்ற மூத்தசட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

டெல்லி துணை நிலை ஆளுநரான வி.கே.சக்சேனா உள்ளிட்டோருக்கு டெல்லி அரசு தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் பல விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், இதன்மூலம் அரசு கஜானாவுக்கு ரூ.144.36 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி சக்சேனா கடந்தாண்டு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி கலால்துறையின் பொறுப்பாளராக இருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, புதிய கலால் கொள்கையின் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கொள்கை ரீதியாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, அதன்மூலம் மோசடியாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளதாக மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த முறைகேடு மூலம் கிடைத்த கோடிக்கணக்கான தொகையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல்களுக்காக ரூ.100 கோடிக்கும் மேல் செலவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் ஏற்கெனவே கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி முதல்வரான கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பிறகு தற்போது திஹார் சிறையில் ஏப்.15 வரை விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் திஹார் சிறையில் இருந்தே முதல்வராக நிர்வாகத்தைத் தொடர முடியுமா என சென்னை உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கே.எம்.விஜயன் (மூத்த வழக்கறிஞர்): மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(4) பிரகாரம் குற்ற வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் பதவி தானாக காலியாகி விடும். மாறாக குற்ற வழக்கில் வெறுமனே குற்றம் சுமத்தியதற்காக பதவி தானாக பறிபோகாது. கேஜ்ரிவாலைப் பொருத்தமட்டில் யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை. அதனால் அவர் சிறையில் இருந்தவாறு முதல்வராக தொடர சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றாலும் அது ஒழுக்கம் சார்ந்த நடத்தை ரீதியாக தவறானது.

அதேநேரம் சிறையில் இருந்து கொண்டேமுதல்வராக அரசு நிர்வாகத்தை நடத்துகிறேன் என்றால் அதற்கும் யாரும் மறுப்புதெரிவிக்க முடியாது. கேஜ்ரிவால் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வளவுதான். அதை நீதிமன்றம் தான் விசாரித்து தீர்மானிக்க முடியும்.

கே. ரவி அனந்த பத்மநாபன் (மூத்த வழக்கறிஞர்): பொது ஊழியர் என்ற வரையறைக்குள் சாதாரண அரசு ஊழியர் முதல் மாநில முதல்வர் வரை அனைவரும் அடக்கம். ஆனால் முதல்வருக்கென தனிப்பட்ட சில அதிகாரங்கள் உள்ளன. ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய சாதாரண அரசு ஊழியர்கள், அதிகாரிகள் 48 மணி நேரத்துக்கு சிறையில் அடைக்கப்பட்டாலே அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டால் பதவியும், அதிகாரமும் தானாக பறிபோய்விடும். தற் போது கேஜ்ரிவால் முதல்வராக பதவியில் தொடர எந்த தடையும் இல்லை.

ஆனால் ஒரு முதல்வர் தனது அன்றாடப்பணிகளை கவனிக்க உளவுத் துறை முதல் அரசு உயரதிகாரிகள் வரை அனைவருடனும் கலந்து ஆலோசித்து, அரசு இயந்திரத்தை வழிநடத்த முக்கிய முடிவு எடுக்க, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட வேண்டிய சூழலில் அனைவரும் திஹார் சிறைக்கு சென்று ஆலோசனை நடத்துவார்களா என்றால் அது நடைமுறையில் சாத்தியம் கிடையாது.

பொது ஊழியர் என்ற அடிப்படையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் இருந்தாலே அவர் தனது பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு, தனது மனைவி சுனிதாவைக்கூட முதல்வராக்கட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *