தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை 199-வது இடத்தில் உள்ளது.

தூய்மையான நகரங்கள் மக்களின் சிறந்த வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், இந்திய நாட்டில் உள்ள தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படும். 

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வியாழன் அன்று, 2023 தூய்மையான நகரங்கள் (ஸ்வச் சர்வேக்ஷன்) குறித்த முடிவுகளை வெளியிட்டது. 

குப்பை (சித்தரிப்பு படம்)

இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்களின் சுகாதாரம், குப்பை சேகரிப்பு, கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு போன்றவற்றைச் சிறப்பாகக் கையாளுவது குறித்து வருடந்தோறும் கணக்கெடுக்கப்படுகிறது.    

நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 446 முக்கிய நகரங்களில், தூய்மையான நகரங்களுக்கான தேசிய தரவரிசையில் இந்தூர் மற்றும் சூரத் முதல் இடத்தையும், நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெறவில்லை என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 112- ல் திருச்சி இடம்பிடித்ததுள்ளது. திருச்சி 9,500 மதிப்பெண்களுக்கு 5,794.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. 

முந்தைய கணக்கெடுப்பில் 262-வது இடத்தில் இருந்த திருச்சி இப்போது 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. தூத்துக்குடி தேசிய தரவரிசையில் 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும் பிடித்துள்ளது.  

தமிழக்தின் தலைநகர் சென்னை இந்த பட்டியலில் 199-வது இடத்தில் உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். 

அவர் கூறுகையில், “ஸ்வச் சர்வேக்ஷனில் கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்குத் தனி ரேங்கிங் போடப்பட்டது. இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமுள்ள மக்கள் தொகையுள்ள நகரங்கள் 45 மட்டுமே உள்ளன. அதில் சென்னை 44வது இடத்தை பிடித்தது. 

இந்த முறை அளவுகோல்கள் மற்றும் டினாமினேட்டர் (denominator)  மாற்றப்பட்டுள்ளது. இந்த முறை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு ரேங்கிங் போட்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமுள்ள 446 நகரங்களில், நாம் 199-வது இடத்தில் இருக்கிறோம். 

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன்

சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். போன முறை 44-வது இடம், இந்த முறை 199-வது இடம் எனப் பலர் நினைக்கலாம்.

ஸ்வச் சர்வேக்ஷனில் போன ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்குத் தனி ரேங்கிங் போட்டார்கள். இந்த முறை 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை என ரேங்கிங் போட்டுள்ளார்கள். 

இதனால், இந்த இரண்டு தரவரிசையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானது. இதனை ஒப்பிடுவது டி -20 , டெஸ்ட் மேட்ச்சை ஒப்பிட்டு பார்ப்பதற்கு சமம்.

கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களான 7500ல் பெருநகர சென்னை மாநகராட்சி 2866.4 பெற்று 37.5 சதவிகித மதிப்பெண் பெற்றது. இந்தாண்டு மொத்த மதிப்பெண்களான 9,500ல் 4313.79 பெற்று 45.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

இந்தாண்டு சென்னை மாநகராட்சி மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிர்ணயிக்கப்பட்ட சராசரி அளவை விட அதிகளவில்  4313.79 மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.  

குப்பைகளை பிரித்தெடுப்பது, கம்ப்யூட்டர்களில் தரவுகளைச் சரியாகப் பதிவு செய்வது என அனைத்து அளவுகளிலும் மாநில சராசரி மற்றும் தேசிய சராசரியில் சென்னை சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொது கழிப்பறையை மக்கள் பயன்படுத்துவது முன்னேற்றம் அடைந்துள்ளது.

இருந்தபோதும் இந்த இரண்டும் ரேங்கிங்குமே பெருமைப்படும் அளவிற்கு இல்லை. இதை பலர் சென்னை மாநகராட்சியின் பிரதிபலிப்பு என நினைக்கிறார்கள். இது உண்மையில் உங்களைப் பற்றிய பிரதிபலிப்பு. அதில் மதீப்பிடு செய்யப்படுவது மக்களின் செயல்பாடுகளை தான்’’ என்று கூறினார்.

இது குறித்து தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் சீனிவாசன் கூறுகையில், “வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வருடந்தோறும் தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்துகிறார்கள்.

அதேசமயம், ஒவ்வொரு வருடமும் கணக்கெடுக்கும் ரேங்கிங் முறையை மாற்றுகிறார்கள். இந்தியா முழுவதுமுள்ள நகரங்களில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

முந்தைய ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமுள்ள மக்கள் தொகையுள்ள நகரங்களுக்குத் தனி தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பிடப்பட்டது. இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமுள்ள மக்கள் தொகையுள்ள நகரங்கள் 45 மட்டுமே உள்ளது. இந்த 45 நகரங்களில் சென்னை 44-வது இடத்தை பிடித்தது. அதற்கடுத்த இடத்தை மதுரை பிடித்தது.

இந்தாண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான தரவரிசை ரத்து செய்யப்பட்டது. 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள 446 நகரங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு கொடுக்கப்பட்டது. 

இந்த 446 நகரங்களில் சென்னை 199வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட மதிப்பெண் மற்றும் சராசரியை அதிகமாகப் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு 37.5% பெற்று இருந்தோம். இந்த முறை 45.4% பெற்று இருக்கிறோம். கிட்டத்தட்ட 10 சதவிகித முன்னேற்றம் உள்ளது. 

கடந்த மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு `ஸ்வச் அம்பாசடர்’ (தூய்மை தூதுவர்கள்) என்ற ஐடி கார்டுகள் சென்னை கார்பரேஷனில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 

திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை எதிர்ப்பது, குப்பைகளைப் பொதுவெளியில் போடுவதைத் தவிர்ப்பது, குப்பைகளை தனித்தனியாக பிரித்துக் கொடுப்பது எனச் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

சென்னை சுகாதாரம் மற்றும் கழிவு நீக்க வசதிகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ரேங்கிங் சிஸ்டம் மாறியதாலே குழப்பம் நிலவியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *