திருப்பத்தூர்/ராணிப்பேட்டை: திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்படஉள்ளது. இதையொட்டி, அரசு தொடர் விடுமுறை அறிவித்துள்ளதால் அரசு அலுவலகங்களில் பொங்கல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது.

சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற இத்திருவிழாவில் புதுபானையில் பச்சரிசி போட்டு அரசு அலுவலர்கள் பொங்கல் விழாவை வரவேற்றனர். இதில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் கிராம கலைக்குழுவினர் ஒயிலாட்டம், தெருக்கூத்து, மயிலாட்டம், பம்பை, தவில், நாதஸ்வரம் வாசித்து பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.பின்னர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தயார் செய்யப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட பொங்கல் வாழ்த்து மடலை அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர், கந்திலி அடுத்த நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது குடும்பத்தாருடன் மாட்டு வண்டியில் பயணம் செய்தார். பொங்கல் விழாவை கொண்டாட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த கிராமமக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஜோலார்பேட்டை அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திருப்பத்தூர் கோட்டாட்சியர் பானு, சுற்றுலாத்துறை அலுவலர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர்

வளர்மதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் பாரதிநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று மாலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கினார்.

தமிழர் பாரம்பரிய முறையில் அதிகாரிகளும், அலுவலர்களும் வேட்டி-சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும், பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம் என பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். விளையாட்டில் வெற்றி பெற்ற தனிநபர்கள் மற்றும் குழுவினருக்கும், பங்கேற்றவர்களுக்கும் இறுதியில் பரிசுகளை ஆட்சியர் வளர்மதி வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி, முதன்மை கல்வி அலுவலர் உஷா, துணை ஆட்சியர்கள் முரளி, பூங்கொடி, ஸ்ரீவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரசாத் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இறுதியில், அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *