புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தலால் சிறுமி கர்ப்பமான வழக்கில் ஓட்டுநரை ஆயுள் முழுக்க சிறையில் அடைக்க போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சோபனா தேவி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2021-ல் ரெட்டியார்பாளையத்தில் ஊரடங்கின்போது பெற்றோர் வேலைக்கு சென்றநிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் செல்போன் சார்ஜர் கேட்பதுபோல் ஓட்டுநர் சதீஷ் பெரியான் (31) பழகியுள்ளார். இச்சூழலில் 14 வயதான சிறுமிக்கு உடல்நலக்குறைவால் மருத்துவரிடம் பெற்றோர் அழைத்து சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீஸில் சிறுமியின் பெற்றோர் புகார் தந்தனர்.

போலீஸார் விசாரித்தபோது சிறுமியை மிரட்டி சதீஷ் பெரியான் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் பெரியானை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைதான அவருக்கு மனைவி, குழந்தை இருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சதீஷ் பெரியான் மற்றொரு போக்சோ வழக்கில் (பாலியல் வன்கொடுமை வழக்கு) கைதானர். அவ்வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கடந்த 13.4.2023-ல் பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சூழலில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கு, போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். நீதிபதி சோபனா தேவி இன்று தீர்ப்பளித்தார். அதில் போக்சோ சட்டப்பிரிவு 6-ன் கீழ் வாழ்வின் எஞ்சிய காலத்துக்கு ஆயுள் தண்டனையை அனுபவிக்கவேண்டும். பிரிவு 451 ஐபிசியின் கீழ் 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், பிரிவு 506(ii) இன் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஏககாலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும், எனவும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *