பெங்களூரு: கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுசனா சேத் கைது செய்யப்பட்ட நிலையில், மகனைக் காண வருமாறு அப்பெண் தனது கணவருக்கு குறுந்தகவல் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு முன்னால் அவர் இந்தத் தகவலை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் சுசனா சேத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 7-ஆம் தேதி பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று சுசனா சேத் கணவர் வெங்கட்ராமனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் சந்திப்புக்கான இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். வெங்கட்ராமனுக்கு அங்கு செல்ல சுசனா வரவில்லை. சுசனாவுக்கு வெங்கட்ராமன் போன் செய்துள்ளார். ஆனால் அதற்குள் போனை சுசனா ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்துக் கொண்டுள்ளார். சில மணி நேரம் காத்திருந்த பின்னர் வெங்கட்ராமன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அவர் வர்த்தகம் தொடர்பாக இந்தோனேசியா சென்றுள்ளார். இந்தத் தகவல் வழக்கு விசாரணையில் அண்மைத் தகவலாகக் கிடைத்துள்ளது.

நடந்தது என்ன? – பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை (ஜன.8) சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் ஊழியர்கள் சுசனா சேத்தை விமானத்தில் பெங்களூரு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காரணம் அங்கிருந்து சுமார் 600 கி.மீ தூரம் தொலைவில் உள்ள பெங்களூரு செல்ல சாலை வழியாக 12 மணி நேரம் ஆகும். அதுவே, விமானத்தில் 90 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்பதால் விமான பயணத்தை ஹோட்டல் ஊழியர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுசனா சேத் ஊழியர்களின் அறிவுறுத்தலை நிராகரித்து டாக்ஸியில் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

டாக்ஸி வந்ததும் தனது அறையில் இருந்து பெரிய பையுடன் தனியாக வந்துள்ளார் சுசனா. ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக செல்வதை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள், அவர் சென்றதும் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போதும் ரூமில் சிவப்பு நிறக் கறைகளைக் கண்ட ஊழியர்கள், அந்தக் கறை இரத்தம் என்பதை உறுதி செய்தவுடன் சந்தேகம் அடைந்து உடனடியாக கோவா போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் ஹோட்டலை அடைந்து, டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவை தொடர்பு கொண்டுள்ளனர். சாதாரணமாக பேச்சு கொடுப்பது போல், சுசனாவிடம் அவரின் மகன் குறித்த தகவலை திரட்டியுள்ளனர். ஹோட்டலுக்கு அவருடன் வந்த மகனை காணவில்லை என்பதையும் போலீஸார் டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவிடம் கேட்கவைத்துள்ளனர். அதற்கு, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மகனை விட்டுவிட்டதாக கூறிய சுசனா, தவறான முகவரி ஒன்றையும் அளித்துள்ளார். உடனடி விசாரணையில் இறங்கிய கோவா போலீஸார் சுசனா கொடுத்தது போலி முகவரி என்பதை உறுதிசெய்துகொண்ட பின், டாக்ஸி டிரைவரை மீண்டும் தொடர்புகொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வண்டியை திரும்பும்படி உத்தரவிட்டுள்ளனர்.

போலீஸார் சொன்னது போல், கர்நாடகாவின் சித்ரதுர்கா நகர் காவல் நிலையத்துக்கு வண்டியை திருப்பிய டாக்ஸி டிரைவர் அங்கிருந்த போலீஸாரிடம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார். அதன்படி, சுசனாவை விசாரித்த போலீஸார், அவர் வைத்திருந்த பெரிய பையை சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. சுசனாவின் நான்கு வயது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெரிய பையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் சுசனாவை உடனடியாக கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கோவாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் மகனை கொன்றதை ஒப்புக்கொண்ட சுசனா, அதற்கான காரணமாக கணவரை பிரிய இருப்பதை கூறியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *