தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவி லேயே இயக்கப்பட்டன. இதனால், தனியார் மற்றும் மினி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து, தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பாக அனைத்து தொழிற் சங்க போராட்டக் குழு சார்பில் நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்தனர். இதையடுத்து, காலை 7 மணிக்குமேல் சில தொழிலாளர்களை மட்டும் வைத்து குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரிக்கு செல்ல போதிய அரசு நகரப் பேருந்துகள் இல்லாததால், தனியார், மினி பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்தனர். கல்லூரி, பள்ளி, அலுவலக நேரம் என்பதால் போதிய பேருந்துகள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பொறையாறு அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த பேருந்துகள்.

படம்: வீ.தமிழன்பன்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பகல் 12 மணி வரை ஒரு சில அரசுப் பேருந்துகள் மட்டுமே திருச்சி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர் வழித்தடங்களில் இயக்கப்பட்டன. இதனால், புதிய பேருந்து நிலையம் பயணிகள் கூட்டம் இல்லாமலும், பேருந்துகள் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, அம்மாபேட்டை, மருங்குளம், புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் நகர பேருந்துகள் மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக

வெறிச்சோடி காணப்படும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்.

படம்: ஆர்.வெங்கடேஷ்

மயிலாடுதுறையில்… மயிலாடுதுறையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழககிளை பணிமனையில் இருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் 56 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேருந்துகள் இரவு நேரங்களில் பெருநகரங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொறையாறு பணிமனையிலிருந்து இயக்கப்படும் 26 பேருந்துகளில் 20 பேருந்துகள், சீர்காழி கிளையில் இருந்து இயக்கப்படும் 41 பேருந்துகளில் 39 பேருந்துகள், காரைக்கால் பணிமனையிலிருந்து இயக்கப்படும் 38 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கப்பட்டதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பணிமனையில் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகள் இயக்கம் குறித்து கிளை மேலாளரிடம் கேட்டறிந்தார். மயிலாடுதுறை பணிமனை அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில்…

நாகையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 52 பேருந்துகளில் 2 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திலிருந்து இயக்கப்படும் 41 பேருந்துகளில் 36 பேருந்துகள் இயக்கப்பட்டன. வேதாரண்யம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 48 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிளை பணிமனை அலுவலகம் முன்பு நேற்று

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்.

திருவாரூரில்… திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 35 பேருந்துகளில் 15 பேருந்துகள், மன்னார்குடியிலி ருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்பட்டன. நன்னிலம் கிளை பணிமனை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *