இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, விசாரணை நடத்துமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் – மல்யுத்த வீராங்கனை, வீரர்

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தலைவர் பதவியும் காலாவதியானதால், அடுத்து அந்தப் பதவிக்கு நடத்தப்படும் தேர்தலில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருக்கமான நண்பர், பிஸ்னஸ் பார்ட்னர் சஞ்சய் சிங், தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தார். இவர் ஏற்கெனவே, உத்தரப்பிரதேச மல்யுத்த அமைப்பின் துணைத் தலைவராகவும், 2019 முதல் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்திருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், இவருக்கு எதிராக தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் – சஞ்சய் சிங்

இப்படியிருக்க, இன்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 47 வாக்குகளில் சஞ்சய் சிங் 40 வாக்குகளைப் பெற்று இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக வெற்றிபெற்றார். இந்த நிலையில், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சாக்‌ஷி மாலிக், மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக கதறி அழுதிருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாக்‌ஷி மாலிக், “40 நாள்கள் நாங்கள் சாலையில் படுத்துக்கிடந்தோம். பிரிஜ் பூஷணின் பிஸ்னஸ் பார்ட்னரும், அவருக்கு நெருக்கமானவருமான சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மல்யுத்தத்திலிருந்து விலகிவிடுவேன். ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஒரு பெண் தலைவராக இருந்தால், பாலியல் துன்புறுத்தல் நடக்காது. இதுவரை, ஒரு பெண்கூட தலைவராக நியமிக்கப்படவில்லை. நீங்களே பட்டியலைப் பாருங்கள்.

எங்களால், முடிந்தவரைப் போராடினோம். இனியும் போராடுவோம், புதிய தலைமுறை வீராங்கனைகளும் போராட வேண்டும்” என்று கூறிக்கொண்டிருந்தபோதே, சஞ்சய் சிங் வெற்றிபெற்றது தெரியவர, மல்யுத்தத்திலிருந்தே விலகுவதாகக் கதறி அழுதபடியே அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

வினேஷ் போகட்

மேலும், மற்றொரு வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் நண்பர் சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால், வீராங்கனைகளுக்கு இன்னும் பாலியல் தொல்லை தொடரும். நாட்டில், நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை. எங்களின் மல்யுத்த வாழ்க்கை இருளில் மூழ்கியிருக்கிறது. எங்கு செல்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்று கண்ணீர்விட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *