திருச்சி: திருச்சி மாவட்டம் திருச்சி மேற்குவட்டத்தில் பிராட்டியூர், மணப் பாறை வட்டம் சாம்பட்டியில் 4 இடங்கள், புத்தாநத்தம், புதுவாடி, துறையூர், பாதர்பேட்டை, தளுகையில் 2 இடங்கள், சிக்கத்தம்பூர், லால்குடி வட்டம் ஊட்டத்தூரில் 2 இடங்கள் என 14 இடங்களில், ஏற்கெனவே கல் உடைக்கப்பட்ட மற்றும் இதுவரை கல் உடைக்கப்படாத குவாரிகளை, 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடுவதற்கான அறிவிக்கை திருச்சி மாவட்ட அரசிதழில் அக்.28-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை நவ.15-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செலுத்தவும் மற்றும் திறந்தமுறை ஏலம் மற்றும் மறைமுக ஒப்பந்தப் புள்ளி உறைகள் திறப்பது உள்ளிட்ட நடைமுறைகள் ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் நவ.16-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, துணைஆட்சியரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான சரண்யா தலைமையில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் பாலமுருகன் முன்னிலையில் நேற்று குவாரி ஏலம் நடைபெற்றது.

இதனிடையே, லால்குடி வட்டம் ஊட்டத்தூரில் உள்ள 2 கல் குவாரிகளை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, அந்த கல் குவாரிகளுக்கான ஏலம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊட்டத்தூரை தவிரஇதர இடங்களில் உள்ள 10 கல்குவாரிகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில், சாம்பட்டி, தளுகை, சிக்கத்தம்பூர் ஆகிய 3 கல் குவாரிகளுக்கான ஏலத்தொகை மட்டுமே அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் இருந்ததால் ஏலம் விடப்பட்டன.

பிராட்டியூர், சாம்பட்டியில் 3, புத்தா நத்தம், புது வாடி, பாதர்பேட்டை, துறையூர், தளுகை ஆகிய 9 கல் குவாரிகளுக்கான ஏலத் தொகை அரசு நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் அவற்றுக்கான ஏலம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குவாரி ஏலத்தையொட்டி மாநகர காவல் ஆணையர் என்.காமினி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *