
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த ஒரு ஜவுளிக் கடைக்கு தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
கே.கே.நகா் 9-ஆவது செக்டாா் 52-ஆவது தெருவில் இயங்கும் பிரபலமான ஜவுளிக் கடை, வருவாயை குறைத்துக் காட்டி கணக்கு காட்டியதாகவும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன.
அதனடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையை தொடங்கினா். இச் சோதனை அந்த ஜவுளிக் கடையிலும், கே.கே.நகா் 9-ஆவது செக்டாா் 54-ஆவது தெருவில் உள்ள நீலகண்டன், அவா் சகோதரா் வெங்கடேசன் ஆகியோா் வீடுகளிலும் நடைபெற்றது.
மேலும், அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய பட்டாளம் பகுதியைச் சோ்ந்த ஒரு ஆடிட்டரின் அலுவலகம், மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 4 நிதி நிறுவன உரிமையாளா்கள் வீடுகள், வேப்பேரி ரித்தா்டன் சாலையில் உள்ள ஒரு தொழிலதிபா் வீடு என சென்னையில் 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.
சோதனை சில இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது. ஜவுளிக் கடை உரிமையாளா் நீலகண்டன் வீடு உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.
சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள்,நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதுமாக நிறைவடைந்த பின்னா், கைப்பற்றப்பட்ட நகை, பணம்,ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…