கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு, டாலர் நோட்டு. கூட்டணியிலிருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு” என்றார்.

வேலுமணி

இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தி.மு.க ஆட்சி போக வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை.

மதுரை மாநாட்டைப் பார்த்து தி.மு.க-வினர் பயந்துவிட்டனர். தி.மு.க ஆட்சி போய்விடும் எனக் காவல்துறையினர் பயந்துவிட்டனர். கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்தார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி, இப்போது குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது கருத்து.

அண்ணாமலை

வேலுமணி, தங்கமணி ஆகியோர் பா.ஜ.க பற்றிப் பேசவில்லை எனச் சிலர் சொல்கிறார்கள். எங்களுக்கு எதிரி தி.மு.க-தான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டுத் தர மாட்டோம். கூட்டணியிலிருந்துகொண்டு அண்ணாமலை இப்படிப் பேசக் கூடாது.

ஜெயலலிதா பற்றிப் பேச அண்ணாமலைக்குத் தகுதியில்லை. பெரியார் வந்த பின்னர்தான் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்தது. அண்ணா மன்னிப்புக் கேட்டதாக உண்மைக்குப் புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது. இது ஒரு தலைவருக்குத் தகுதியில்லை. அண்ணாமலை உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்போம்.

எடப்பாடி பழனிசாமி

எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையை தி.மு.க-வினரும், சில பா.ஜ.க-வினரும் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெல்லும். நமக்குள் இருப்பது குடும்பச் சண்டைதான். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “அ.தி.மு.க தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை மக்களுக்காக உழைத்தவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசியிருக்கக் கூடாது. எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்.

வேலுமணி

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் காப்பாற்றுவது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். அண்ணாவைப் பற்றி அண்ணாமலை பேசியதற்கு சி‌.வி.சண்முகம் எதிர்வினையாற்றினார். எடப்பாடி பழனிசாமி சொல்வதைச் செய்வோம். ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும்” என்றார்.

இதற்கிடையே, “அண்ணாமலையை நீக்கினாலோ அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளிக்காமல் சென்றார்.

வேலுமணி

அதே நேரத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், “கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது” எனக் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *