இந்தியாவில் மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவிகித இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் வகையில், `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’-வை புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீடு

இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஒரு பங்கு, அதாவது 11 சதவிகித இடங்கள் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேசமயம், இந்த இட ஒதுக்கீடு முறை ராஜ்ய சபாவுக்குப் பொருந்தாது. இந்த நிலையில், உலக அளவில் நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், 185 நாடுகளில் இந்தியா 141-வது இடத்தில் இருக்கிறது.

உதாரணத்துக்கு ஒரு நாட்டில் மேல் சபை, கீழ் சபை என இரு சபைகள் இருப்பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடங்கிய அவையின் (இந்தியாவில் மக்களவை) தரவுகள் மட்டுமே இதில் கணக்கில்கொள்ளப்படும். அதன்படி, தேசிய நாடாளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான இன்டர்-பார்லிமென்டரி யூனியன் (Inter-Parliamentary Union) வெளியிட்ட தரவுகள், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (கீழ் சபை) பெண்கள் 15 சதவிகிதம் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது உலக அளவிலான சராசரி அளவான 26 சதவிகிதத்தை விடவும் குறைவாகும்.

இந்தியா

இதில், 1956 முதல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 20 சதவிகிதமாக இருக்கிறது. வங்காளதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 350 இடங்களில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, வங்காளதேச நாடாளுமன்றத்தில், பெண்கள் 21 சதவிகிதம் இருக்கின்றனர். நேபாள நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33.09 சதவிகிதமாக இருக்கிறது.

இந்த வரிசையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 20 சதவிகிதமாகவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 35 சதவிகிதமாகவும் இருக்கிறது. மேலும், இலங்கை 5 சதவிகிதம், கத்தார் 4 சதவிகிதம், ஓமன் 2 சதவிகிதம், குவைத் 3 சதவிகிதம் என இந்தியாவைவிட குறைவாக இருக்கின்றன.

ருவாண்டா (Rwanda)

அதேசமயம் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆண்களுக்கு சமமாக 50 சதவிகிதம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா (Rwanda), நாடாளுமன்றத்தில் 61 சதவிகித பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு அரசால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் (மேல் சபை) பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14 சதவிகிதம் ஆகும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *