வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் மக்களுக்கு மின்சார மானியம் வழங்கும் விவகாரத்தில் கவர்னர் சக்சேனா – ஆம் ஆத்மி அரசு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
டில்லியில் நுகர்வோருக்கு மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ஆம் ஆத்மி அரசு வழங்கி வருகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். மொத்தம் உள்ள 58 லட்சம் நுகர்வோரில், 48 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மானியம் வழங்குவதற்கு என 2023- 24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.3,250 கோடியை மாநில அரசு ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில், மாநில மின்துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது: 46 லட்சம் மக்கள் பயன்பெறும் மின்சார மானியம் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திங்கள் முதல், மக்கள் மானியம் இல்லாமல் கட்டணம் செலுத்த வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், மானியம் வழங்குவது தொடர்பான ஆவணத்திற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. கவர்னரை 5 நிமிடங்கள் சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை, எனக்கூறியிருந்தார்.
இதனை மறுத்துள்ள கவர்னர் விகே சக்சேனா அலுவலகம், அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அரசியலுக்காக தேவையற்ற கருத்துக்களை கூற வேண்டாம். பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மக்களை திசைதிருப்ப வேண்டாம். ஏப்.,15 கடைசி நாள் என்ற நிலையில் ஏப்.,4 வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென ஏப்.,11ல் ஆவணங்களை அனுப்பியது ஏன்?. ஏப்.,13ல் கடிதம் எழுதிவிட்டு , உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் நாடகத்தை மாநில அரசு கைவிட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
Advertisement
