சி.பி.ஐ மாநிலத் செயலாளர் முத்தரசன், “ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்பு என்ன சொல்கிறது, சட்டம் என்ன சொல்கிறது என அனைத்தும் தெரியும். தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களைக் கிளப்பவே முடியாது. ஆளுநர் ரவி தொடர்பாக குற்றச்சாட்டுப் பட்டியலைக் குடியரசுத் தலைவரிடம் எம்.பி-க்கள் வழங்கியிருக்கின்றனர். குறைந்தபட்சம் விசாரிக்க வேண்டாமா? அவர்கள் கேட்க மாட்டார்கள், டெல்லி முதலாளிகள் குடைச்சல் கொடுக்கவே ஆளுநர் ரவியை தமிழகத்துக்கு அனுப்பியிருக்கின்றனர்” எனக் குற்றம்சுமத்தினார்.
அதைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், “இது ஆர்.எஸ்.எஸ் ஆர்.என் ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம். இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆட்டம் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆளுநருக்குக் கொஞ்சம் அறிவுரை வழங்குங்கள் என குடியரசுத் தலைவருக்கு தி.மு.க தரப்பு கடிதம் கொடுத்திருப்பதாகக் கருதுகிறேன்.

இந்த அடாவடி ஆர்.எஸ்,எஸ் ஆர்.என் ரவியை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி குடியரசு தலைவருக்கு தி.மு.க தரப்பில் கடிதம் தந்திருக்க வேண்டும். ஜனநாயக முறையில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆனால் இனி இந்த இயக்கம் ஜனநாயக ரீதியாக மட்டும் போராடாது’’ என எச்சரித்தார்.
மேலும் இது குறித்துப் பேசிய திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர், பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தான் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அர்.எஸ்.எஸ் என்ற பயிற்சிப் பட்டறையில் வளர்ந்தவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதற்கு ஆர்.என் ரவி ஒரு எடுத்துக்காட்டு. அவர்களுக்கு மாநில அரசுகளின் மீது முரண்பாடுகள் உண்டு. மாநில அரசுகளே இருக்கக் கூடாது, பிராந்திய கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது. இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும், இந்தியாவுக்கு அரச மதத்தை நிறுவ வேண்டும். தேசியக் கொடியைக் காவிக் கொடியாக மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் திட்டம்.” என்றார்.