தலைமைத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் பற்றி அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுதல் வேண்டும். மேலும், அதன்படி நியமனங்கள் செய்யப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இல்லை, வெற்றிடம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு முக்கியமான நியமனத்திலும் இந்தியாவின் தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகள் அமர்ந்தால், நீதித்துறையின் பணிகளை யார் முன்னெடுப்பார்கள்?
மேலும், நீதித்துறை நடுநிலையானது. நீதிபதிகள் எந்தவித குழுக்கள் அல்லது அரசியல் சார்பு அமைப்புகளின் பகுதியாகவும் இல்லை. ஆனால், ஒருசில ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை அரசாங்கத்துக்கு எதிராக மாற்ற முயலும் எதிர்க்கட்சிகளைப்போல இந்திய எதிர்ப்புக் கும்பலின் (anti indian gang) ஒரு பகுதியாக இருக்கின்றனர்” என்றார்.
மேலும், இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்துப் பேசியவர், “இந்திய நீதித்துறையை கீழிறக்கும் முயற்சிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ராகுல் காந்தியோ அல்லது யாரேனும் இந்திய நீதித்துறை அபகரிக்கப்பட்டுவிட்டது என்றோ அல்லது நாட்டில் ஜனநாயகம் முடிந்துவிட்டது என்றோ, நீதித்துறை இறந்துவிட்டது என்றோ சொன்னால், அதன் அர்த்தம் என்ன… இந்திய நீதித்துறையை குறைத்து மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அழிக்க அனுமதிக்க மாட்டோம். இந்த நிகழ்வுக்கு சட்டவிதிகளின்படி அரசு நடவடிக்கை எடுக்கும். யாரும் தப்பிக்க மாட்டார்கள். நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.