சென்னை:

அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது எனவும் அதே நேரத்தில் அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்குமான ஆள்தேர்வு பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இனி மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் ஆகியவற்றில் தான் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

ஊழல் இல்லாத ஆள்தேர்வு

மேலும், ஆவின், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிக பணியிடங்கள் உள்ளன எனவும், தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், அது தான் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆள்தேர்வுக்கு வழிவகுக்கும் எனவும் தனது அறிக்கையில் மருத்துவர் ராமாதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டு திணிப்பு

2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு அனைத்து பொதுத்துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அவை பணியாளர் நியமனங்களில் தகுதி, திறமைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளும், ஊழலும் பெருகுவதற்குத் தான் வழிவகுத்தன எனவும், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என கூறியுள்ளார்.

ஆள் தேர்வு முறையில் ஓட்டைகள்

பொதுத்துறை நிறுவனங்களின் ஆள் தேர்வு முறையில் ஓட்டைகள் இருப்பது தான் முறைகேடுகள் நடப்பதற்கும், மோசடிகள் செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும் எனவும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது நியமனங்களில் ஊழலைத் தடுக்க உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என கூறியுள்ளார்.

அரசுக்கு கோரிக்கை

பொதுத்துறை நிறுவனப் பணிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதி பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கான ஆள்தேர்விலும் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே, பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும் எனவும், தேர்வாணையம் வலுப்படுத்தப் பட வேண்டும், அதேபோல் ஆணையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையையும் தமிழக அரசு கணிசமாக அதிகரிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *